டெல்லி: வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று ஜனாதிபதியை சந்தித்து எதிர்க்கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் மசோதா தாக்கலின் போது பெரும் அமளி நிலவியது. மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவைத்தலைவர் மைக்கை பறிக்கவும் முயன்றனர்.
இதையடுத்து, 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட, சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடரை புறக்கணித்தன. நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் எம்பி குலாம்நபி ஆசாத் ஜனாதிபதியை இன்று சந்தித்தார். அப்போது, வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்ற கோரிக்கை அடங்கிய எதிர்க்கட்சிகளின் மனுவை ஒப்படைத்தார்.
இது குறித்து குலாம் நபி ஆசாத் கூறியதாவது: குரல் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஜனநாயகத்தின் கோவிலில் அரசியலமைப்பின் மதிப்பு குறைந்துவிட்டது.
சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை திருப்பி அனுப்ப வேண்டும். மசோதா குறித்து எதிர்க்கட்சிகளிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும். விதிகளை மீறி நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது என்று ஜனாதிபதியிடம் முறையிட்டோம் என்று கூறினார்.