கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில், 34 இடங்களில் போட்டியிட்ட திமுகவால், ஒன்றில்கூட வெல்ல முடியாமல் போனதுடன், சில இடங்களில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அவலமும் நடந்தது.
ஜெயலலிதா, தன்னையே பிரதமராக முன்னிறுத்திக் கொண்டு தேர்தலை சந்திக்க, பாரதீய ஜனதா தலைமையில் ஒரு கூட்டணி போட்டியிட, சில சிறிய கட்சிகளை மட்டுமே சேர்த்துக்கொண்டு தேர்தலை சந்திப்பதற்கு திமுக எடுத்த முடிவுதான் இந்த படுதோல்விக்கு காரணம் என்று அப்போது விமர்சிக்கப்பட்டது மற்றும் இப்போதும் விமர்சிக்கப்படுகிறது.
சரி, ஏதேனுமொரு தேசியக் கட்சியை உடன் சேர்த்துக்கொண்டால்தான், ஒரு வலுவான மாநிலக் கட்சி, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற வாதத்தின் அடிப்படையிலேயே நாம் இப்போது சில உதாரணங்களைப் பார்ப்போம்.
* கடந்த 1996 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், 5 ஆண்டுகள் பிரதமராக இருந்த காங்கிரசின் நரசிம்மராவை முன்னிறுத்தி, தேர்தலை சந்தித்தார் ஜெயலலிதா. ஆனால், காங்கிரசிலிருந்து பிரிந்து வந்து மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற்ற மூப்பனாரின் தமாகா உடன் கூட்டணி அமைத்து, பிரதமர் வேட்பாளர் குறித்தப் பரப்புரை இன்றி தேர்தலை எதிர்கொண்டது திமுக.
என்ன ஆனது? தமிழகத்தின் 39 இடங்களையும் வாரி சுருட்டியது திமுக அணி.
* 1998 நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாமல், முக்கிய தேசியக் கட்சியுடனும் இணையாமல் போட்டியிட்ட திமுக கூட்டணி, மொத்தம் 10 இடங்களில் வென்றது.
* 1999 நாடாளுமன்ற தேர்தலில், யார் பிரதமர் என்ற தெளிவின்றி, காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டியும் – ஒட்டாத கூட்டணி வைத்துப் போட்டியிட்ட அதிமுகவின் அணி, மொத்தம் 14 இடங்களை வென்றது.
* 2004 நாடாளுமன்ற தேர்தலில், திமுக – காங்கிரஸ் அணியில் யார் பிரதமர் என்ற பெரிய தெளிவின்றி (சோனியாதான் பிரதமர் என்பது அப்போது பெரியளவில் ஏற்கப்படவில்லை) இருந்தாலும், அக்கூட்டணி 40 இடங்களையுமே அள்ளிவிட்டது.
எதிர்முகாமில், 6 ஆண்டுகள் பிரதமராக இருந்த வாஜ்பாயை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்த அதிமுக, மொத்தமாக கழுவி விடப்பட்டது.
* 2009 நாடாளுமன்ற தேர்தலில், எந்த முக்கிய தேசியக் கட்சியுடனும் கூட்டணி வைக்காத, பிரதமர் வேட்பாளராக எவரையும் முன்னிறுத்தாத அதிமுக அணி, 12 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
இதே தேர்தலில், டெல்லி தொடர்பான எந்த இலக்குமே இல்லாத விஜயகாந்த் கட்சிக்கு 10% வாக்குகள் விழுந்தன என்பதையும் மறந்துவிடலாகாது.
நாம் கடந்த காலத்திற்குள் மிகவும் ஆழமாக ஊடுருவிச் செல்லவில்லை. 1996ம் ஆண்டிலிருந்துதான் காலச்சக்கரத்தை சுழற்றினோம். அதிலேயே பல நல்ல உதாரணங்கள் கிடைத்துள்ளன. மேற்கண்ட உதாரணங்களின் அடிப்படையில் பார்த்தால், திமுகவிற்கு 2014 தேர்தலில் குறைந்தபட்சம் 5 முதல் 6 இடங்களாவது கிடைத்திருக்க வேண்டும். பல கருத்துக் கணிப்புகளும் அதைத்தான் கட்டியம் கூறின.
ஆனால், ஏன் கிடைக்கவில்லை? 2011 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் மீது படிந்திருந்த அல்லது படிய வைக்கப்பட்டிருந்த பல எதிர்மறை அம்சங்கள், 2014 தேர்தலிலும் கிட்டத்தட்ட அப்படியே இருந்தன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மத்திய கூட்டணி அரசுகளில் அங்கம் வகித்து, திடீரென ஈழப்பிரச்சினையைக் காரணம் காட்டி விலகி வந்தது திமுகவிற்கு எதிர்மறை தாக்கத்தையே தந்தது எனலாம்.
அதுதவிர, அக்கட்சியில் அந்த சமயத்தில் நிலவிய உட்கட்சிப் பூசல்கள், கட்சி நிர்வாகிகளின் தொய்வு உள்ளிட்டவை முக்கிய காரணிகளாக இருந்தன.
பாரதீய ஜனதா கூட்டணியைப் பொறுத்தவரை, சர்ச்சைக்குரிய கன்னியாகுமரி மற்றும் தருமபுரி தொகுதிகளில் மட்டுமே வென்றது.
அதிமுகவின் அதுவரையில்லாத பிரமாண்ட வெற்றிக்கு ஜெயலலிதாவின் ‘பிரதமராக முன்னிறுத்திக் கொள்ளல்” உத்தி ஒரு முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், தேர்தல் கமிஷனின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகளும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
தமிழகத்தில் அதற்குமுன் இல்லாத ஒரு நடைமுறையாக, தேர்தலுக்கு முந்தைய நாள் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியினர் காவல்துறை உதவியுடன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துவிட்டார்கள் என்ற புகாருடன், பெரும் எண்ணிக்கையிலான போலி வாக்காளர்கள் குறித்தப் புகாரும் எழுந்தன.
இவையெல்லாவற்றையும்விட, திமுக – காங்கிரஸ் தனித்திருந்த சூழலில், மூன்றாவது பெரிய அணியாக பாரதீய ஜனதா கூட்டணி போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்தது, ஜெயலலிதாவின் வெற்றிக்கு மிகப் பிரதானமாக உதவியது.
மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகள், அணிகளாகப் பிரியும் வாக்குகள், பிரச்சார உத்திகள் மற்றும் பிரச்சார வலிமை, ஊடகங்களின் ஆதரவு அல்லது எதிர்ப்பு, தேர்தல் கமிஷனின் நடுநிலையான அல்லது சர்ச்சைக்குரிய செயல்பாடுகள், வாக்காளர்களுக்கான பண விநியோகம், கட்சி நிர்வாகிகளின் துடிப்பான மற்றும் சரியான செயல்பாடு, கூட்டணி பலம், எதிர்மறையாகவோ அல்லது நேர்மறையாகவோ ஊதிப் பெருக்கப்படும் விஷயங்கள் உள்ளிட்ட பலவித காரணிகளே, எந்த தேர்தல் வெற்றியையும் தீர்மானிக்கின்றன.
மற்றபடி, நாடாளுமன்ற தேர்தல் பயணத்தில், ஒரு முக்கியமான தேசியக் கட்சி வழித்துணையாக கட்டாயம் வரவேண்டும்; இல்லையென்றால், வெற்றியை வழிப்பறி திருடர்கள் கொள்ளையடித்து விடுவார்கள் என்ற கருத்தெல்லாம் நடைமுறை உண்மைகளுக்கு ஒத்துவரவில்லை.
– மதுரை மாயாண்டி