மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இங்கு கொரோனா தொற்றின் 2ம் அலை காரணமாக நாள்தோறும் 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் தடுப்பூசி கையிருப்பு குறித்து மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் கூறி இருப்பதாவது: மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. பற்றாக்குறையால் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
தடுப்பூசி பற்றாக்குறை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனிடம் தெரிவித்துள்ளோம். பற்றாக்குறையால் மும்பையில் 26 முகாம்களும், புனேவில் 100 முகாம்களும் மூடப்பட்டுள்ளன என்றார்.