டெல்லி:

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வரும் நிலையில் சில வியாபாரிகள் தங்களது நிறுவனத்தில் கார்டு மூலம் ஸ்வைப் எந்திரத்தில் பணம் செலுத்தும்போது சட்ட விரோதமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

சிறிய நகரங்கள் உள்ள வர்த்தக நிறுவனங்கள், பெரிய நகரங்களில் உள்ள சிறிய வர்த்தக நிறுவனங்களில் இத போன்ற முறைகேடு நடக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், வர்த்தகர்கள் மத்தியில் இந்த மோசடி தொடர்ந்து பரவி வருகிறது.

இது குறித்து அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பிரவீன் கந்தல்வால் கூறுகையில், ‘‘ டிஜிட்டல் பண பரிமாற்றத்திற்கு மாறும் சமயத்தில் பண பரிமாற்ற கட்டணம் பெரும் தலைவலியாக உள்ளது. ஒன்று இதை வர்த்தகர் ஏற்க வேண்டும். அல்லது வாடிக்கையாளர் ஏற்க வேண் டும்’’ என்றார்.

ஆயிரம் ரூபாய் வரையிலான டெபிட் கார்டு மூலமான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 0.5 சதவீதமும், ரூ. 2 ஆயிரம் வரை ஒரு சதவீதமும் வசூல் செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் கிரெடிட் கார்டு வர்த்தகத்திற்கு 2 சதவீதம் வரை கட்டணத்தை வர்த்தகர்கள் வசூலிக்கின்றனர்.

சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் வசூலிக்கப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான கூடுதல் கட்டணத்தை செலுத்த மறுத்தால் வர்த்தகர்கள் டெபிட் கார்டுகளை பயன்படுத்த மறுக்கின்றனர்.

ஆனால் தங்களுக்கு லாபத்தில் இழப்பு ஏற்படுவதால் அதை ஈடுக்கட்ட இவ்வாறு வசூலிப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். ‘‘டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு என்று தனியாக திட்டம் வகுக்க வேண்டும். வங்கிகள் கட்டணம் விதிக்க கூடாது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறிய வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசு வரிச் சலுகை அளிக்க வேண்டும்’’ என்று கந்தல்வால் கூறினர்.

தனியார் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ இது வங்கியின் பிரச்னை கிடையாது. இது வர்த்தகருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையிலான பிரச்னை. நாங்கள் இதில் தலையிடமாட்டோம். இந்த பிரச்னை தொடர்பாக எங்களுக்கும் புகார் வந்தது’’ என்றார்.

இது குறித்து ஆன்லைன் நுகார்வோர் அறக்கட்டளை நிறுவனர் பெஜன் மிஸ்ரா கூறுகையில், ‘‘இது அரசால் ஏற்படும் பிரச்னை. இப்பிரச்னைக்கு விரைந்து முடிவு எடுக்க வேண்டும். தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு கொண்டு வரவேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்து மோசடியில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான பிறகு கடந்த நவம்பர் மாதத்தில் இந்த கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.