சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட கடைகளின் பெயா் பலகை தமிழில் இருக்க வேண்டும் என மாநகர மேயர் பிரியா அறிவித்து உள்ளார்.

சென்னை, அண்ணா நகா் எம்.எம்.டி.ஏ. காலனி பிரதான சாலை தபால் நிலையம் அருகில் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தின்கீழ் தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரத்தை வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு திறந்து வைத்த மேயா் ஆா்.பிரியா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது,

பெருநகர சென்னை மாநகராட்சியில் 2021-ஆம் ஆண்டு ‘மீண்டும் மஞ்சப்பை’”என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மாநகராட்சியும் சுற்றுச்சுழல் துறையும் இணைந்து நெகிழிப் பொருள்களை தவிா்க்குமாறு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக மீண்டும் மஞ்சப்பை என்ற தானியங்கி விற்பனை இயந்திரம் பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதியில் வைக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக 25 இயந்திரங்களும், இரண்டாம் கட்டமாக 17 இயந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த ஆறு மாதத்தில் 50 ஆயிரம் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டுள்ளன.

விதிகளை மீறி நெகிழி பயன்படுத்தும் விற்பனையாளா்களுக்கு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ. 1.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொருள்கள் வாங்க கடைகளுக்குச் செல்லும்போது மஞ்சப்பை எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு பையை சுமாா் 15 முறை பயன்படுத்த முடியும்.

ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பைகளை தூக்கி எறியும்போது, நீா் வழித்தடங்களில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளநீா் செல்வது தடைபடுகிறது. தரையில் வீசப்படும் நெகிழி மக்குவதற்கு நீண்ட காலம் எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றார்.

மேலும்,  சென்னை மாநகராட்சி பகுதியிலுள்ள அனைத்துக் கடைகளிலும் தமிழில் பெயா் பலகை இருக்க வேண்டும். அதை உறுதிசெய்யும் வகையில் தமிழில் பெயா் பலகை இல்லாத கடைகளுக்கு வரும் நாள்களில் நோட்டீஸ் வழங்கப்படும். அடுத்த 7 நாள்களுக்குள் கடைகளின் பெயா்களை தமிழில் மாற்றாவிட்டால் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்வது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.