கொரோனா வைரஸ் தாக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் அதிகரித்து வரும் நிலையில், அங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பலர், ஊரடங்களை மதிக்காமல் ஊர் சுற்றி வருவதால், கோபமடைந்த அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே , ஊரடங்கை மீறுபவர்களை சுட்டுக்கொல்லுங்கள் என்று கூறி உள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பிலிப்பைன்சிலும் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 107 பேர் பலியான நிலையில், 2,633 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமல் படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
ஆனால், அந்நாட்டின் எதிர்க்கட்சிகள், பல இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்று போராட்டத்தில குதித்தன.
இதுதொடர்பாக தொலைகாட்சியில் உரையாற்றிய அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே, “இதுபோன்ற தேவையற்ற போராட்டங்களுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன், அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி போராடுபவர்களால் பிரச்சினை ஏற்பட்டாலோ, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டாலோ அவர்களைச் சுட்டுக் கொல்லுங்கள். இதுதான் காவல்துறை மற்றும் ராணுவத்துக்கு என் உத்தரவு என்று அதிரடியாக கூறினார்.
அதிபரின் இந்த பேச்சு அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது. டிவிட்டர் வலைதளத்தில், #OustDuterte என்ற ஹேஷ்டேக் டிரென்டிங்காகப்பப்ட்டு வருகிறது.