கோயமுத்தூர்: கோவையில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதல் காரணமாக இந்த தற்கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கோவையில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் தனியார் மெடிக்கல் அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு நீட் தேர்வுக்கான கோச்சிங் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில், கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் என்பவரது மகள் சுவேதா (வயது 19) அங்குள்ள விடுதியில் தங்கி  நீட் தேர்வுக்கு படித்து வந்தார்.  அப்போது அங்கு படித்து வந்த மதுரையை சேர்ந்த மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு மாணவனின் பெற்றோர் திடீரென நேரில் வந்து, அவரது காதலனை பெற்றோர் அழைத்து சென்று விட்டனர். இதனால், விரக்தி அடைந்த மாணவி நீட் தேர்வு பயிற்சி மையத்தில் உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலையில் வகுப்பு முடிந்து அறைக்கு திரும்பிய சக மாணவிகள் சுவேதா தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அறையில் சுவேதா வைத்து இருந்த 50-க்கும் மேற்பட்ட காதல் கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.