அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரியதாக கருதப்படும் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள நகை கொள்ளை வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை, அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் (ICE) நாட்டை விட்டு செல்ல அனுமதித்தது அரசு வழக்கறிஞர்களை அதிர்ச்சியிலும் அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ளது.
ஜேசன் நெல்சன் பிரெசில்லா ஃப்ளோரஸ் என்பவர், 2022-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள நெடுஞ்சாலை ஓய்வு நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பாதுகாப்பு வாகனத்தை (armored truck) நோட்டமிட்டு, அதிலிருந்து வைரங்கள், மரகதங்கள், தங்கம், ரத்தினங்கள் மற்றும் விலை உயர்ந்த கடிகாரங்கள் உள்ளிட்ட நகைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் ஒருவர்.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஃப்ளோரஸுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் நிலை இருந்தது. ஆனால் அவர் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜாமீனில் வெளியே இருந்த ஃப்ளோரஸை, ICE அதிகாரிகள் திடீரென குடிவரவு காவலில் எடுத்தனர். இதைப் பற்றி தங்களுக்கு முன்பே தெரியாது என அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் மாத இறுதியில், ஃப்ளோரஸ் தானாக நாடு விட்டு செல்ல விருப்பம் தெரிவித்ததையடுத்து, ICE அவரை தென் அமெரிக்காவுக்கு அனுப்பியது.

இதையடுத்து, ஃப்ளோரஸின் வழக்கறிஞர் ஜான் டி. ராபர்ட்சன், தனது வாடிக்கையாளருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அரசு வழக்கறிஞர்கள், எதிர்காலத்தில் மீண்டும் வழக்கு நடத்த வாய்ப்பு இருப்பதால், விசாரணைக்கு ஆஜராவதன் அடிப்படையில் மட்டுமே வழக்கை கைவிட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
டிசம்பர் 16-ம் தேதி நடைபெற்ற குடிவரவு விசாரணையில், ஃப்ளோரஸ், சிலிக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருந்தாலும், நீதிபதி அதனை நிராகரித்து, இறுதி நாடு கடத்தல் உத்தரவை பிறப்பித்தார். பின்னர் அவர் ஈக்வடாருக்கு அனுப்பப்பட்டார்.

இந்த சம்பவம் மிகவும் அபூர்வமானது என அமரிக்க அரசின் முன்னாள் அரசு வழக்கறிஞர் லாரி லெவென்சன் கூறினார். “இத்தனை பெரிய குற்ற வழக்கில், அரசு வழக்கறிஞர்களுக்கு தெரியாமல் ஒரு சந்தேகநபரை நாடு கடத்துவது நம்ப முடியாத ஒன்று. இது ஒரு கை மற்றொரு கையை அறியாமல் செயல்பட்டது போன்றது,” என்றார்.
இந்த கொள்ளையால் பாதிக்கப்பட்ட நகை வியாபார நிறுவனங்களும் அதிருப்தி தெரிவித்துள்ளன. “வழக்கு முடிவுக்கு வரும்முன் குற்றவாளி நாட்டை விட்டு சென்றால், பாதிக்கப்பட்டவர்களுக்கு பதில்களும், தீர்ப்பும், நிம்மதியும் கிடைக்காது,” என அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த கொள்ளை சம்பவம் 2022 ஜூலையில் நடந்தது. சான் பிரான்சிஸ்கோ அருகே நடைபெற்ற சர்வதேச நகைக் கண்காட்சியில் இருந்து புறப்பட்ட பிரிங்க்ஸ் (Brink’s) பாதுகாப்பு வாகனத்தை சந்தேகநபர்கள் தொடர்ந்து கண்காணித்தனர்.

ஓய்வு நிலையத்தில் வாகன ஓட்டுநர்களில் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தபோது, மற்றொருவர் உணவு வாங்க சென்ற சமயத்தில், கொள்ளையர்கள் வாகனத்தை உடைத்து நகைகளை திருடினர்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் மேல் என பாதிக்கப்பட்டவர்கள் கூறினாலும், பிரிங்க்ஸ் நிறுவனம் திருடப்பட்ட நகைகள் 10 மில்லியன் டாலருக்கும் குறைவான மதிப்புடையவை என தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]