ஐதாராபத்:
ந்தியாவில் இருந்து சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்துவதில் ஈடுபட்ட விஞ்ஞானி ஒருவரும், விமானப்படை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
ஐதாராபத்தில் இருந்து போதைப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்த கடத்தலில் தொடர்புடைய நபர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக  கண்காணித்து வந்தனர்.
bothai-1
பல மாநிலங்களில் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், நேற்று விமானப்படை அதிகாரி ஒருவர் மகாராஷ்டிராவில் உள்ள நண்டண்ட் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார்.  ஐதராபாத்தில் இருந்து கோவா செல்ல முயன்ற போது இந்த விமானப்படை அதிகாரி கைதானார். அவரிடமிருந்து 7 லட்ச ரூபாய்  ரொக்கப்பணமும் 5 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த இரு வாரங்களாக கண்காணிக்கப்பட்ட பின்னர், இந்த அதிகாரி கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல, பெங்களூருவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவரும் போதை கடத்தல் செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். இவர் பெயர் வெங்கட் ராம் ராவ் என்பது மட்டுமே அறிய வந்துள்ளது. மற்ற விவரங்கள் எதையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ஆம்ஃப்டைன் எனப்படும் போதைப்பொருள்  221 கிலோ பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இவற்றின் மதிப்பு 230 கோடி ரூபாய் இருக்கும் என்றும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த போதை மருந்து கடத்தலுக்கு வெங்கட் ராம் ராவ் என்ற விஞ்ஞானி முக்கிய நபராக செயல்பட்டதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஞ்ஞானி மற்றும்  இந்திய விமானப்படை அதிகாரி என மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள உள்ள நபர்கள் போதைப்பொருள் கடத்தல்  தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.