மும்பை,
2019ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. தனித்து போட்டியிடுவோம் என்று சிவசேனா அறிவித்து உள்ளது.
பாரதியஜனதாவின் மிக நெருங்கிய கூட்டணி கட்சி சிவசேனா. மகாராஷ்டிராவில் சிவசேனா ஆதரவுடன் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டு மோடி தலைமையிலான பண மதிப்பிழப்பு அறிவிப்பை தொடர்ந்து சிவசேனா பாரதிய ஜனதா மீது அதிருப்தியில் உள்ளது. அவ்வப்போது பாரதியஜனதாவை எதிர்த்தும் குரல் கொடுத்து வருகிறது.
மோடியின் 3 ஆண்டுகால ஆட்சியில் எந்தவித புது திட்டங்களும் இல்லை என்றும், கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசின் திட்டங்களையே மறு பெயரிட்டும், தொடங்கியும் வைத்து வருகிறது என்றும், மக்களிடையே மோடி அலை மங்கி வருவதாகவும் கூறியது.
சமீபத்தில் திடீரென காணாமல் போய் பின்னர் மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்ட விசுவ இந்து பிரிசத் தலைவர் பிரவீன் தொகாடியா, பாரதியஜனதா அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருந்தார். அதுகுறித்தும், பிரவீன் தொகாடியாவின் குற்றச்சாட்டுகளுக்கு மோடி, அமித்ஷா பதில் அளிக்கவேண்டும் என்றும் சிவசேனா பகிரங்கமாக கோரியிருந்தது.
இதுபோன்ற சூழ்நிலையில், இன்று மும்பையில் சிவசேனா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. . சிவசேனாவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்கு சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தலைமை வகித்தார். அதையடுத்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், அடுத்து வரும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலிலும், 2019ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும் பாரதியஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்றும், சிவசேனா தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக சிவசேனா -பாரதியஜனதாவின் இடையே உள்ள உறவு முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து விமர்சித்துள்ள அரசியல் விமர்சகர்கள், சிவசேனாவுக்கும் பாஜகவும் இடையே உள்ள தேனிலவு முறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.