மும்பை: பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தும் யுஜிசி முடிவுக்கு எதிராக ஆதித்ய தாக்கரே உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதனால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந் நிலையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இறுதி ஆண்டு கடைசி செமஸ்டர் தேர்வு நடத்துவது கட்டாயம் என்று யுசிஜி அறிவித்தது.
கொரோனா காரணமாக தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. இந் நிலையில், மகாராஷ்டிராவில்  சிவசேனாவின் யுவசேனா பிரிவு, யுஜிசி முடிவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுதொடர்பாக யுவசேனா அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி உள்ளதாவது: மாணவர்களின் மனநிலை, உடல்நிலை, அச்சம், பாதுகாப்பு ஆகியவற்றை மத்திய அரசு புறக்கணிக்கிறது. கொரோனா தொற்று பரவல் தேசிய பேரிடராக உள்ளதை கருத்தில் கொண்டு, யுஜிசி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.
தேர்வுகளை நடத்தினால் மாணவர்களுக்கும், கண்காணிப்பாளர்களுக்கும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது. உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி கூட இறுதி ஆண்டுத் தேர்வுகளை ரத்து செய்துள்ளன. யுஜிசி உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.