மும்பை

சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்,- காங்கிரஸ் கூட்டணிக்கு 165 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதாக சிவசேனா கட்சியின் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் சிவசேனா கட்சி எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் பாஜக ஆட்சியைப் பிடித்து தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகவும்  தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.

இதை எதிர்த்து சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணையில் உள்ளது.  இந்நிலையில் சிவசேனா கட்சித் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத், செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.   அவர் பாஜக முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ரவுத், “ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் தேவேந்திர ஃபட்நாவிஸ் அளித்துள்ள போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஜகவுக்கு ஆட்சி அளிக்க அவர் அனுமதி அளித்துள்ளார். ஆளுநர் எங்களுக்குப் பெரும்பான்மையை நிரூபிக்க நவம்பர் 30 ஆம் தேதி வரை கெடு அளித்து விட்டு தற்போது இவ்வாறு செய்துள்ளார்.

சிவசேனா – தேசிய வாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு 165 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு உண்டு ஆளுநர் அடையாள் அணிவகுப்புக்கு அழைத்தால் 10 நிமிடங்களில் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்.    ஆனால் ஆளுநரின் நடவடிக்கையால் மகாராஷ்டிராவில் நவம்பர் 23 ஆம் தேதி ஒரு கருப்பு தினமாக ஆகிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.