டில்லி:
மோடி அரசின் ஆட்சி இறுதிகாலத்தை எட்டியுள்ள நிலையில், நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா, இந்த பட்ஜெட்டில், வருமான வரிக்கான வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து 8 லட்சமாக உயர்த்த வலியுறுத்தி உள்ளது.
மோடி அரசின் கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் இதுவரை காணாத அளவுக்கு துன்பத்தை அனுபவித்து உள்ளனர். மோடி கொண்டு வந்துள்ள டிஜிட்டல் மயம், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, விவசாயிகள் புறக்கணிப்பு போன்றவற்றால் மக்கள் பாஜக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
தற்போது 5வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மோடி அரசுக்கு இதுவே கடைசி பட்ஜெட். அதைத்தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த பரபரப்பான சூழலில் மோடி அரசின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. நாளை இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த பட்ஜெட்டில், மக்களை மயக்கும் விதமாக மோடி அரசு வாக்குறுதிகளை அள்ளி வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் விவசாய கடன், வருமான வரி வரம்பு உயர்வு உள்பட பல்வேறு சலுகைகளை வாரி வழங்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா, மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில், தனிநபர் வருமான வரிக்கான வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து 8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
சிவசேனா எழுதி உள்ள இந்த கடிதத்தில், சிவசேனா கட்சி எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.