அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சிவபுரி என்கிற ஊரில் அமைந்துள்ளது.
பாரத நாடு இறைவன் மற்றும் இறை அன்பர்கள் நடமாடும் பூமி. எண்ணற்ற ஆன்மீக திருவிளையாடல்கள் இந்த நாட்டில் இறைவனால் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதிலும் சிவபூமியான தமிழகத்தில் சைவ சமயத்தை வளர்த்த நால்வர் என்று கூறப்படும் அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரின் அரும் முயற்சியால் சைவம் இம்மண்ணில் நிலைத்திருக்கிறது. இதில் திருஞானசம்பந்தரின் வாழ்வில் முக்கிய திருப்பத்தை தந்த “சிவபுரி அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில்” சிறப்புக்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாக இருக்கிறது இந்த உச்சிநாதர் திருக்கோயில் இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் உச்சிநாதர் என்றும் மத்யனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள் கனகாம்பிகை என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தல விருட்சமாக நெல்லி மரம் இருக்கிறது. கோயிலின் தீர்த்தம் கிருபா தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊர் புராண காலத்தில் திருநெல்வாயில் என்றழைக்கப்பட்டது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம்.
முற்காலத்தில் சீர்காழியில் வசித்த சிவஞான இருதயர் பார்வதி தேவி தம்பதிக்கு மகனாக பிறந்தார் சைவ சமய குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்தார். சட்டைநாதர் கோயிலுக்கு இவரது பெற்றோர் வந்த போது, ஞானசம்பந்தரை குளக்கரையில் விட்டுவிட்டு அவரது தந்தை சிவஞான இருதயர் நீராட சென்றார். அப்போது குழந்தை சம்பந்தருக்கு பசி ஏற்பட்ட போது அழ தொடங்கினர்.
கைலாயத்தில் இருக்கும் சிவபெருமான் இதை கண்ட போது பார்வதி தேவியிடம் ஞானசம்பந்தரின் பசியை தீர்க்குமாறு வேண்ட, பார்வதி தேவி அங்கு வந்து சம்பந்தருக்கு தாயாக இருந்து ஞானப்பால் ஊட்டி சென்றார். குளத்தில் குளித்து முடித்து விட்டு வந்த இருதயர் குழந்தை பால் அருந்திய அறிகுறியோடு இருந்ததை கண்டு சம்பந்தரிடம், பால் வழங்கியது யார் என வினவ தோடுடை செவியன் என்கிற வரிகள் தொடங்கி பதிகம் பாடினார் சம்பந்தர். பின்பு அம்பிகையே சம்பந்தருக்கு பால் ஊட்டியதை அறிந்து மிகுந்த ஆனந்தம் கொண்டார் அவரது தந்தை.
சம்பந்தருக்கு திருமணம் நிச்சயம் ஆன போது இத்தலத்தில் அவரும், அவரது உறவினர்களும் நன்கு பசியோடு ஒரு உச்சி பொழுதில் ஓய்வெடுத்த போது சிவபெருமானே கோயில் பணியாளர் வடிவில் வந்து சம்பந்தர் மற்றும் அவரது உறவினர்கள் அனைவருக்கும் விருந்தளித்து அவர்களின் பசியை ஆற்றினார் இதனால் இத்தல சிவன் உச்சிநாதர், மத்யனேஸ்வரர் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
சிவபெருமான் அகத்திய சித்தருக்கு காட்சி தந்த தலங்களில் ஒன்றாக இந்த உச்சிநாதர் திருக்கோயில் இருக்கிறது. இக்கோயிலின் மூலவர் சிவலிங்கத்திற்கு பின்புறம் சிவனும் பார்வதி தேவியும் திருமண கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். சிதம்பரம் பகுதிக்குட்பட்ட நெல்வயல்கள் அதிகம் சூழ்ந்த பகுதியாக இது இருந்ததால் இது திருநெல்வாயில் என அழைக்கப்பட்டது.