டில்லி
சிவசேனாவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத் கோழியும் முட்டையும் சைவ ஆயுர்வேதம் என தெரிவித்துள்ளார்.
உயிர்களைக் கொன்று தின்பது எல்லாமே அசைவ உணவு என்பதே உண்மையாகும். ஒரு சிலர் கீரை மற்றும் பால் கூட அசைவத்தில் சேர்ந்தது எனக் கூறி வருகின்றனர். குறிப்பாக ராமலிங்க வள்ளலாரை பின் பற்றுவோர் பால், தயிர், நெய் உள்ளிட்ட எதையும் உட்கொள்வது கிடையாது அதே நேரத்தில் நெடுநாட்களாக முட்டை சைவம் என்னும் பேச்சு நிலவி வருகிறது.
சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத் நேற்று மாநிலங்களவையில் ஆயுர்வேதம் குறித்து உரையாற்றினார். அவர் தனது உரையில், “கோழிக்கறி என்பது சைவமா அல்லது அசைவமா என்பதை அமைச்சரவை முடிவு செய்ய வேண்டும். ஏற்கனவே முட்டை சைவம் எனச் சொல்லப்படுகிறது. கோழி முட்டையில் இருந்து வரும் போது அதை அசைவம் என சொல்லப்படுகிறது.
நான் ஒரு முறை நந்தார்பர் பகுதியில் உள்ள ஒரு சிற்றூருக்குச் சென்றிருந்தேன். அங்கு எனக்கு அளிக்கப்பட்ட உணவில் என்ன உள்ளது என கேட்டேன். அவர்கள் அது ஆயுர்வேத கோழி என கூறினர். மேலும் அதை உண்பதன் மூலம் அனைத்து நோயில் இருந்தும் நிவாரணம் பெற முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது ஏற்கனவே சரன்சிங் பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத முட்டை உற்பத்தி செய்வதாக சொன்னது நினைவுக்கு வந்தது. எனவே கோழிக்கறி என்பது ஆயுர்வேதமா என்பதை ஆய்வாளர்கள் முடிவு செய்ய வேண்டும். ஆயுர்வேத முட்டைகள் சைவ உணவால் உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
எனவே அதில் உள்ள புரொடினை சைவர்களும் உண்ணுகின்றனர். அதிலிருந்து வரும் கோழியும் சைவம் என பொருள் கொள்ளலாம். நாட்டில் ஒரு சில சைவர்கள் பால் மற்றும் பால் பொருட்களைச் சாப்பிடாத போதும் இந்தியாவில் பல சைவர்கள் அவற்றை உண்ணுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.