மும்பை: ஆட்சியில் சரிபங்கு என்பதை, எழுதி தருமாறு, சிவசேனா நெருக்குவதால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக 105 இடங்களிலும், கூட்டணியான சிவசேனா 56 இடங்களிலும் வென்றன.
இதையடுத்து, மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. ஆனாலும் யாருக்கு அரியாசனம் என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
யாருக்கு முதலமைச்சர் பதவி என்பதில் குழப்பம் தீர்ந்தபாடில்லை. தேர்தலுக்கு, முன்பு பேசியவாறு ஆட்சியில் சரிபாதி பங்கு தர வேண்டும். இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை தர வேண்டும்.
அதற்கான உத்தரவாதத்தை எழுத்துப்பூர்வமாக பாஜக தர வேண்டும் என்று கடுமையான நிபந்தனையை சிவசேனா விதித்திருக்கிறது. முன்னதாக, உத்தவ் தாக்கரேவை சந்தித்த புதிய எம்எல்ஏக்கள், ஆதித்யா தாக்கரேவை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
மகாராஷ்டிராவில், ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை. ஆக மொத்தத்தில், சிவ சேனாவின் தயவின்றி பாஜக ஆட்சியமைக்க முடியாது என்பது திண்ணமாகிறது.
ஆகவே தான், தேர்தலுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தப்படி, பாதிக்கு பாதி பதவிகள் அடிப்படையில் அரசு அமைக்கப்படும் என சிவசேனா கூறி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனார். சிவசேனாவின் இந்த திடீர் நெருக்கடியால், மகாராஷ்டிரா அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
[youtube-feed feed=1]