மும்பை
பிரதமராக நினைக்கும் ராகுல் காந்தியை மோடி கேலி செய்யக் கூடாது என சிவசேனா கூறி உள்ளது.
பாஜகவின் நெருங்கிய தோழமைக் கட்சியாக சிவசேனா விளங்கி வந்தது. கடந்த மகாராஷ்டிரா தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு பாஜக ஆட்சி அமைத்தது. தற்போது இரு கட்சிகளில் இடையில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என சிவசேனா அறிவித்துள்ளது. அத்துடன் பாஜக செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி சிவசேனா கடுமையாக விமர்சித்து வருகிறது.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது கட்சி வரும் 2018 பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பெற்றால் பிரதமராக பதவி ஏற்பேன் என தெரிவித்தார். இதற்கு மோடி உட்பட பல பாஜக தலைவர்கள் ராகுல் காந்தியை வேடிக்கையாக கேலி பேசி வருகின்றனர். இதற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிவசேனாவின் செய்தி தொடர்பாளரான சஞ்சய் ரௌத், “ராகுல் காந்தி கூறியதை வைத்து பாஜகவினர் வேடிக்கையாகவும் கேலியாகவும் பேசி வருவது அவர்களின் அகந்தையை காட்டுகிறது. இந்தியாவின் பெரிய கட்சிகளில் ஒன்றான காங்கிரஸின் தலைவர் தனது கட்சி பெரும்பான்மை பெற்றால் பிரதமராவேன் என்பதில் தவறேதும் இல்லை.
கடந்த 2014ஆம் வருட தேர்தலின் போது கட்சியின் மூத்த தலைவரான அத்வானி இருக்கும் போது தாம் பிரதமராக விரும்பிய மோடி செய்தது சரியான காரியமா? உங்களுக்கு அவர் பிரதமராவது பிடிக்கவில்லை என்றால் அவரை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். அதை விடுத்து இவ்வாறு அவரை எரிச்சல் மூட்டுவது தவறானதாகும். ” என தெரிவித்துள்ளார்.