”மும்பையை விட்டு நடிகை கங்கனா வெளியேறலாம்’’- சிவசேனா. எச்சரிக்கை..
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் உள்ள தனது குடியிருப்பில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,ஊடகங்களுக்கு பெரும் தீனியாக அமைந்துள்ளது.
அரசியல் வாதிகள், சினிமா காரர்கள் எனப் பல தரப்பினரும் இந்த மர்ம மரணம் குறித்து ஆளுக்கொரு கருத்துச் சொல்லி வருகிறார்கள்.
சுஷாந்த் மரணம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரணாவத்’’ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மும்பை நகரம் உள்ளது’’ எனக் கொளுத்திப்போட, அந்த கருத்து . நாடு முழுவதும் பரபரப்பு செய்தியானது.
அவரது கருத்துக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால்,தனது சொந்த ஊரான இமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் இருந்து மத்திய போலீஸ் பாதுகாப்புடன் கடந்த வாரம் மும்பை வந்த கங்கனா நேற்று மீண்டும் மணாலி புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சிவசேனா மூத்த தலைவரும், மகாராஷ்டிர போக்குவரத்து அமைச்சருமான அனில் பாரப்’’ மும்பை நகரம் மோசமாக இருப்பதாகக் கருதும் கங்கனா இங்கிருந்து வெளியேற வேண்டும்’’ என்று எச்சரித்தார்.
‘’கங்கனாவுடன் சிவசேனாவுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் மும்பை நகரை யாரும் விமர்சிப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது’’ என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே கங்கனா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் , மும்பையில் உள்ள சினிமா மாபியாக்களுடனும் சுஷாந்தை கொன்றவர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் முதல்வரின் மகன் ஆதித்யாதாக்கரே ‘’ எனக் குறிப்பிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
-பா.பாரதி.