டில்லி

பிரபல தொழிலதிபரான ஷிவ் நாடார் தந்து எச் சி எல் நிர்வாக இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 1976-ம் ஆண்டு தனது நண்பர்களுடன் ஷிவ் நாடார் எச் சி எல் நிறுவனத்தைத் தொடங்கினார். சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இந்த நிறுவனத்தை நடத்தி வந்தார்.  எச் சி எல் நிற்வனம் தொழில்நுட்பத் துறையில் பல முன்னெடுப்புகளை செய்துள்ளது. தேசிய ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்க்கு தேவையான மென்பொருளை எச்.சி.எல். வடிவமைத்தது.

இந்தியாவின் மூன்றாவது பெரிய மென்பொருள் நிறுவனமாக எச்.சி.எல். திகழ்கிறது.  எச்.சிஎல் நிறுவனத்தில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட பங்குகளை ஷிவ் நாடார் வைத்திருக்கிறார்.  தற்போது எச்.சி.எல். நிர்வாக இயக்குநராக இருந்த ஷிவ் நாடார் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இவரது ராஜினாமா உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் குழுவின்  ஆலோசகராக ஷிவ் நாடார் தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிவ் நாடார் பதவி விலகலைத் தொடர்ந்து தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி விஜயகுமார் நிர்வாக இயக்குநராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதாவது ஜூலை 20-ம் தேதி முதல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிர்வாக இயக்குநர் பொறுப்பில் விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

சென்ற ஆண்டே நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ஷிவ் நாடார் விலகினார். அந்த பொறுப்பில் கடந்த ஓர் ஆண்டாக இவரின் மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா உள்ளார்.