கேரளாவின் முதல் பெண் மிருக வேட்டையாளரான குட்டியம்மா தனது 88வது வயதில் காலமானார். பல்வேறு மிருகங்கள், காட்டு யானைகளை தனது குடும்ப தேவைகளுக்காக வேட்டையாடி, விற்றவர் குட்டியம்மா.

பொதுவாகவே ஒரு வேட்டையாளர் என்கிற பொறுப்பை ஏற்க தைரியமும், பயமின்மையும் அவசியம். கேரளாவை சேர்ந்த குட்டியம்மா அத்தகைய வேட்டையாளரே. தெரெசியா தாமஸ் என்கிற குட்டியம்மா, கடந்த திங்கட்கிழமை தனது உடல்நிலை குறைபாடு காரணமாக காலமானார். கதைகளில் வரும் வேட்டையாளர் போல பாவிக்கப்பட்ட அவரை பற்றியும், அவரது தைரியத்தை பற்றியும் இடுக்கியில் உள்ள அஞ்சுநாடு பகுதியினர் பாட்டாகவே பாடி வந்தனர்.

4 சகோதர – சகோதரிகளை கொண்ட குட்டியம்மா, மிருகங்களை வேட்டையாடும் வேட்டையாளர் குடும்பத்தில் பிறந்தவர். 1950ம் ஆண்டு கோட்டையத்தில் உள்ள பாலை பகுதியில் இருந்து இடுக்கியில் உள்ள மரயூர் என்னும் கிராமத்திற்கு தனது குடும்பத்தினருடன் குட்டியம்மா குடிபெயர்ந்தார். அக்கிராமத்திற்கு அவர் வரும்போது, அவருடைய வயது வெறும் 17 தான். கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூரில் தனது பள்ளி வகுப்புகளை பயின்று வந்த குட்டியம்மா, தனது குடும்பம் இடம் மாறிய காரணத்தால், தனது கல்வியை பாதியிலேயே கைவிட்டுவிட்டு வந்தார்.

முதன் முதலாக தனது சகோதரருக்கு மருத்துவ செலவுகள் செய்வதற்காக, மிருகங்களை வேட்டையாட காட்டிற்குள் வந்த குட்டியம்மா, 800 கிலோ எடை கொண்ட காட்டெருமையை தனது துப்பாக்கியால் கொன்றதோடு, அதை விற்கவும் செய்தார். 1950ம் ஆண்டு – 1965ம் ஆண்டுக்கான இடைவேளி காலத்தில் 100க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள் என பல்வேறு மிருகங்களை வேட்டையாடி, மரயூர் கிராமத்தில் உள்ள மார்கெட்டில் விற்று, அதன் மூலம் பெற்ற வருமானத்தை வைத்து தனது குடும்பத் தேவைகளை கவனித்து வந்தார்.

குட்டியம்மாவுக்கு துப்பாக்கியை குறி வைத்து சுட, அவரது சகோதரர்களே கற்றுக்கொடுத்தனர். அப்போது சின்னாறு வன சரணாலயம் உருவாக்கப்படவில்லை. அக்காலக்கட்டத்தில் அப்பகுதியை மரயூர் மலைப்பகுதி என்றே அழைப்பார்கள். 1984ம் ஆண்டு தான் சின்னாறு வன சரணாலயம் உருவாக்கப்பட்டது. இது தொடர்பாக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள முன்னாள் சின்னாறு வன சரணாலய அதிகாரி வி.கே பிரான்சிஸ், “சின்னாறு வன சரணாலய பகுதியில் உள்ள சுருளிப்பட்டியில் சுமார் 7 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை கொண்ட நிலம் குட்டியம்மா குடும்பத்திற்கு சொந்தமானது. ஏனெனினும் அங்கு மிருகங்கள் தாக்குதலில் ஈடுபடுவதன் காரணமாக விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை 1972ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றிய போது, குட்டியம்மா குடும்பத்தினர் விவசாயம் மேற்கொள்ளும் பணியை தொடங்கினர்.

1993ம் ஆண்டு குட்டியம்மாவின் நிலத்தை எடுத்துக்கொண்டு, ரூ. 23 லட்சத்தை அவரது குடும்பத்திற்கு அதற்குரிய இழப்பீடாக அரசு அளித்தது. அதை பேற்றுக்கொண்ட அவரது குடும்பத்தினர், கோட்டையம் அருகில் உள்ள கஞ்சிராப்பள்ளிக்கு குடிபெயர்ந்தனர்” என்று தெரிவித்தார்.

அரசாங்கம் குட்டியம்மாவுக்கு வழங்குவதாக கூறிய 23 லட்சத்தை வழங்க மறுத்ததால், 2005ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கின் உத்தரவின் பேரில், வட்டியுடன் ரூ. 23 லட்சத்தை கேரள அரசு அவருக்கு வழங்கியது.

பிரபல எழுத்தாளரான எம்.ஜே பாபு தனது கண்ணன் தேவன் காணுகல் என்னும் புத்தகத்தில், “குட்டியம்மா தனது குடும்பத்தின் தேவைக்காகவே மிருகங்களை வேட்டையாடினார். அப்போது மிருகங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமில்லை. குட்டியம்மாவும், அவரது சகோதர, சகோதரிகளும் மலை குகைகளில் சுமார் 4 ஆண்டுகள் வசித்து வந்தனர். அவர்கள் காட்டின் விளையும் பழம் மற்றும் தண்ணீரை மட்டுமே உணவாக உட்கொண்டு, வாழ்ந்து வந்தனர். அப்போது வேட்டையாடப்பட்ட மிருகங்களின் உடலை விற்க குட்டியம்மா முயன்றபோது, அவரை ஆண்கள் பயமுறுத்தினர். ஒருமுறை புலிக்குட்டி ஒன்றை காட்டில் இருந்து எடுத்துவந்து, தன்னுடனேயே வைத்து வளர்த்தார். அதை பார்த்த வனத்துறை அதிகாரி ஒருவர் குட்டியம்மாவிடம் எச்சரிக்க, பின்னர் மீண்டும் அந்த புலிக்குட்டி காட்டிலேயே விடப்பட்டது. வன பாதுகாப்பு சட்டம் அமலுக்கு பிறகு, விவசாயத்தை மட்டும் பார்க்காமல், வன பாதுகாப்பு பணிகளையும் குட்டியம்மா மேற்கொண்டிருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

குட்டியம்மா தனது மகன் வி.டி ஜோசப் மற்றும் மருமகள் ஷெர்லி உடன் வசித்து வந்தார். அவரது இறுதி சடங்கு நேற்று மாலை 3 மணிக்கு கோட்டையத்தில் உள்ள அணாக்கல் புனித அந்தோனியார் சர்ச்சில் நடைபெற்றது.