ஸ்ரீநகர்: தந்தையின் காலத்தில் பிரகடனம் செய்யப்பட்ட ஒரு சட்டம் இன்று மகனை பதம்பார்த்துள்ளது. இது காஷ்மீரின் சோகக் கதை!
சுருக்கமாக பிஎஸ்ஏ என்று அழைக்கப்படும் பொது பாதுகாப்பு சட்டத்தில், தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளார் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா. இவர் தற்போது ஸ்ரீநகர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார்.
ஸ்ரீநகரிலுள்ள இவரின் இல்லத்தில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியிலிருந்து சிறை வைக்கப்பட்டுள்ளார் ஃபரூக். இவர் கைது செய்யப்படவில்லை என்று அமித்ஷா கூறினாலும், அவரைப் பற்றிய உண்மையை அறிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஹேபியஸ் கார்பஸ் மனு போட வேண்டிய நிலை.
கடந்த 1978ம் ஆண்டில் ஃபரூக்கின் தந்தை ஷேக் அப்துல்லா காஷ்மீர் முதல்வராக இருந்தபோதுதான் இந்த சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஒருவரை விசாரணையே இல்லாமல் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறையில் வைக்க முடியும்.
தந்தையின் ஆட்சியில் பிரகடனம் செய்யப்பட்ட இந்த சட்டம், தற்போது மகனை தண்டிக்க பயன்பட்டுள்ளது என்பதுதான் காலத்தின் கோலம்!