லண்டன்,

ஹிட்லரை விட மோசமானவர் சர்ச்சில் என முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் “Inglorious Empire”, என்ற நூலை எழுதியுள்ளார்.

இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து பேரரசின் ஆட்சியை மீளாய்வு செய்யும் நூல் இது. இதில் அவர் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு செய்த அநீதிகள்  குறித்து விமர்சனங்களை அடுக்கியுள்ளார்.

அவர் இந்த நூலை விளம்பரப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டன் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த சசி, ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லருடன் இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலை ஒப்பிட்டுப் பேசினார்.

ஹிட்லரை போன்றே சர்ச்சலின் கைகளும் ரத்தக்கறை படிந்தவை என்று கூறியுள்ளார். சர்ச்சில் பேச்சாற்றலிலும், ராஜதந்திரத்திலும் உலகளவில் பேசப்பட்டு வருகிறார்.

இந்தியாவிலும் அவர் புகழப்படுகிறார். ஆனால் மனிதவரலாற்றில் அவர் ஒரு இனவெறியர், ஏகாதிபத்தியவாதி, யுத்தவெறி பிடித்த இனஅழிப்புவாதியாக பதிவுசெய்யப்பட்டுள்ளார் என்று சசிதரூர் கடுமையாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் அவர், வங்காளத்தில் மக்கள் பஞ்சத்தில் உயிரிழந்து கொண்டிருந்தபோது சர்ச்சில் அங்கிருந்து உணவு தானியங்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்ததாகவும்  கூறியுள்ளார்.

ஆங்கில ஏகாதிபத்திய வரலாறு மற்றும் அதில் சர்ச்சிலின் இடம் ஆகியவை அழிக்கமுடியாத கறைகள்.

அவற்றை மறுஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என சசிதரூர்  குறிப்பிட்டார்.