மும்பை

தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெறவில்லை எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறி உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உடனான மோதலால், அஜித்பவார் உள்ளிட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தனர். கடந்த 2 ஆம் தேதி சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி அரசின் துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்றுக் கொண்டார்.

இதையொட்டி அடுத்தகட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக சரத்பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அஜித் பவார் இது குறித்து,

“பல தவறான விமர்சனங்கள் என் மீது வைக்கப்படுகின்றன.  சரத்பவார் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர் ஓய்வு பெற்று இளைய தலைமுறைக்கு வழிவிட வேண்டும்.பொதுவாக  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளனர்”

என்று தெரிவித்தார்.

சரத்பவார் இதற்கு பதிலளிக்கும் விதமாக,

“நான் சோர்வடையவில்லை, ஓய்வு பெறவும் இல்லை. மொரார்ஜி தேசாய் எந்த வயதில் பிரதமர் ஆனார்? நான் பிரதமர் ஆகவோ, மந்திரி ஆகவோ ஆசைப்படவில்லை. நான் மக்களுக்குச் சேவை செய்யவே விரும்புகிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.