மும்பை
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நான் மோடியைப் போல் தனிப்பட்ட முறையில் அவரை தாக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்துள்ளது. அந்த கூட்டணி சார்பில் வார்தாவில் ஒரு தேர்தல் பேரனி நடந்தது. அதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு பேசினார். வார்தா அருகில் உள்ள காந்தி ஆசிரமத்துக்கு அவர் செல்லாதது அந்த பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
பேரணியில் பேசிய மோடி, “சரத் பவார் இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட மறுத்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் தற்போதுள்ள சூழல் அவருக்கு சாதகமாக இல்லை என்பதாகும். அவருடைய கட்சியான தேசியவாத காங்கிரசில் சரத் பவாரை விட அவருடைய சகோதரர் மகனுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. அதனால் சரத் பவார் கட்சியில் தனது பிடியை இழந்துள்ளார்” என கூறினார்.
நேற்று சரத் பவார் ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், “மோடி எங்கு சென்றாலும் தனிப்பட்ட முறையில் தாக்குவதை தொடர்கிறார். நான் அப்படி செய்ய மாட்டேன். தனிப்பட்ட விமர்சனம் என்பது நமது கலசாரம் இல்லை. என்னுடைய தாயார் என்னை அப்படி வளர்க்கவில்லை.
வார்தாவில் நடந்த பேரணியில் தேர்தல் குறித்து ஏதாவது புதிய அறிவிப்பை பிரதமர் மக்களிடம் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக தேசியவாத காங்கிர்ஸ் குறித்து மக்களிடம் விவாதித்துள்ளார். அத்துடன் அஜித் பவார் குறித்தும் தவறுதலாக பேசி உள்ளார்.
எனக்கும் அஜித் பவாருக்கும் இடையே கருத்து வேற்றுமை உள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். ஆனால் அது தவறான தகவல். கட்சிக்கு விசுவாசமான அஜித் பவார் ஒரு திறமையான தலைவராக உருவெடுத்து வருகிறார். ஆனால் அது மோடியின் கண்களுக்கு புலப்படவில்லை.
இந்திர காந்தி ஏழ்மையை ஒழிக்க பாடுபட்டார். ராஜிவ் காந்தி நாட்டுக்கு பல புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வந்தார். ராஜிவ் மறைவுக்கு பிறகு சோனியா காந்தி நாட்டை விட்டு செல்வார் என பலரும் கூறிய போது அவர் இந்திய மக்களின் நலனுக்கு படு பட்டு வந்தார். தற்போது அந்த குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறை நாட்டுக்குபணியாற்ற வந்துள்ளது.” என பேசி உள்ளார்