ஐதராபாத்
ஐபிஎல் 2019 இறுதிச் சுற்றில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷேன் வாட்சன் தனக்கு இரத்த காயம் ஏற்பட்டதையும் வெளியில் சொல்லாமல் விளையாடி உள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் ஷேன் வாட்சன் ஒருவர் ஆவார். இவர் ஐபிஎல் 2019 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் விளையாடி வருகிறார். இவர் இந்த வருடத்துடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு ஆஸ்திரேலிய ரசிகர்களை மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஐதராபாத் நகரில் ஐபிஎல் போட்டிகளின் இறுதிச் சுற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி மொத்தம் 149 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஆட்டத்தில் ஷேன் வாட்சன் விளையாட்டு பலரையும் கவர்ந்தது.
இறுதிப் போட்டியில் இரட்டை இலக்கத்தில் ரன்களை குவித்த மூன்று வீரர்களில் ஷேன் வாட்சன் ஒருவர் ஆவார். இவர் 59 ரன்களை 80 பந்து வீச்சில் எடுத்தார். ஆயினும் சென்னை அணியால் ஆட்ட இறுதியில் 7 விக்கட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஷேன் வாட்சன் ரன்களை குவித்தமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அன்று அவர் விளையாடிய போது எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளன.
அந்த புகைப்படங்களில் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் தெரிய வந்துள்ளது. ஷேன் வாட்சன் முழங்காலில் ஒரு பெரிய இரத்த காயம் உண்டாகி அவர் கால்சட்டையின் முழங்கால் பகுதி முழுவதும் இரத்தத்தால் நனைந்துள்ளது காணப்படுகிறது.
இரத்த காயம் ஏற்பட்டும் அதை வெளிக்காட்டாமல் தொடர்ந்து விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிக ரன்கள் எடுத்துத் தந்த ஷேன் வாட்சனை பலரும் புகழ்ந்துவருகின்றனர்.