சென்னை: திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியில் செயல்பட்டு வரும் சல்மா எனப்படும் தனியார் மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை செய்ததாக, பள்ளி முதல்வர், செயலர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி புறநகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. சல்மா மெட்ரிகுலேசன் என்ற தனியார் பள்ளி. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி மாணவிகளுக்கு மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பான புகாரின் பேரில், சல்மா பள்ளி முதல்வர், செயலாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில், இந்த பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்த பொன் சிங் என்பவர் பள்ளி மாணவிகளை மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளுக்காக தூத்துக்குடிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஒரு இடத்தில் தங்கியிருந்த மாணவிகளக்கு குளிர் பானத்துடன் மது ஊற்றிக்கொடுத்தி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என பொன் சிங் மாணவிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சில மாணவிகள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்த நிலையில், பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடந்த மாதம் (அக்டோபர்) 22-ந் தேதி தூத்துக்குடியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், இதில் பங்கேற்பதற்காக பள்ளி மாணவ-மாணவிகளை உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் அழைத்து சென்றார். அங்கு முதல் நாள் போட்டி முடியாததால் மறுநாள் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் இரவில் தூத்துக்குடியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள்.
அப்போது, பொன்சிங், மாணவிகள் சிலரிடம் மது குடியுங்கள் என்று வற்புறுத்தியும், ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்களது உறவினர்களுடன் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், தகவல் அறிந்த குழந்தைகள் நல அலுவலர் அலெக்ஸ், தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அதிகாரி சிதம்பரநாதன், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், தாசில்தார் பாலசுந்தரம், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்துகேள்வி பட்டதும் அக்கம் பக்கத்தினரும் பள்ளி வளாகத்தில் திரண்டனர்.
இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிகாரிகள், பள்ளி நிர்வாகம், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பள்ளி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியரை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பாலியல் விவகாரம் தொடர்பாக, திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சல்மா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் சுவீட்லி, செயலாளர் செய்யது அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, கோவையில் பதுங்கி இருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் கைது செய்தனர். அவரை திருச்செந்தூருக்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பிறகே இந்த சம்பவத்தில் அவர் மட்டும் ஈடுபட்டாரா? அல்லது வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு படித்து வரும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கடும் கோபத்தில் காணப்படுகின்றனர்.