கொச்சி:
மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்த எர்ணாகுளம் கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் தலைமறைவான நிலையில், அவரை காவல்துறையினர்கைது செய்து போஸ்கோ சட்டத்தில் சிறையில் அடைத்து உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் செண்டமங்கலம் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் படையாத் என்பவர், ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு பிரார்த்தனைக்கு வரு பவர்களிடம் பாலியல் சேட்டை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது பாலியல் சேட்டை அந்த தேவாலயத்தைச்சேர்ந்த பள்ளி சிறுமிகளிடமும் தொடர்ந்த நிலையில், 3 சிறுமிகள் இதுகுறித்து தங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவிக்க, பிரச்சினை பூதாகாரமானது.
இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், பாதிரியார் ஜார்ஜ் படையாத் தலைமறைவானார். அவரைப்பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிகள் நீதிபதி முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.
இந்த நிலையில், பாதிரியாரை பதவி நீக்கம் செய்து, கத்தோலிக்க சபை அறிவித்த நிலையில், தலைமறைவான பாதிரியார் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் எர்ணாகுளம்-அங்கமாலி கத்தோலிக்க மறைமாவட்டம் அறிவுறுத்தியது.
அதேவேளையில் அவரது முன்ஜாமின் மனுவும் கேரள உயர்நீதி மன்றத்தால் நிராகிரிக்கப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதி மன்றமும் ஜாமின் வழங்க மறுத்து பாதிரியார்கள் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அந்த பாதிரியார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு கேரள மாநிலம் திருவல்லாவில், மலங்கரை ஆர்த்தோடெக்ஸ் சிரியன் சபையில்,மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண், திருமணத்திற்கு முன்பு செய்த தவறுக்காக பாதிரியாரிடம் மன்னிப்பு கேட்டார். அதை அறிந்துகொண்ட அந்த பாதிரியார், அந்த பெண்ணை மிரட்டி, தனது இச்சைக்கு பயன்படுத்தி வந்ததுடன் மட்டுமின்றி, அவரது நண்பர்கள் சிலரையும் அழைத்து வந்து அந்த பெண்ணை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்த விவகாரம் தெரிய வந்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த புகாரில் சிக்கிய ஆப்ரகாம் வர்கீஸ் என்கிற சோனி, ஜோப் மேத்யூ மற்றும் ஜாய்ஸ் கே ஜார்ஜ் உள்பட 4 பாதிரியார்கள் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.