நியூயார்க்,
இந்தியாவில் நடைபெற்று வரும் சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதாகவும், இதயத்தை நொறுங்கச் செய்கிறது என்று ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.
ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டூஜரிக் கூறியதாவது,
சமீப காலமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பெண்கள் குறிப்பாக சிறுமிகள் மீது நடைபெற்று வரும் பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் சிறார்கள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பான செய்திகள் தினம் வெளிவந்த வண்ணமே உள்ளது.
கடந்த வாரம் டில்லியில் 8 மாத பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கோபத்தை ஏற்படுத்தியது. அதுபோலவே, பாகிஸ்தானில் 7 வயது சிறுமி ஒருவர் கடந்தமாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுபோன்ற செயல்கள் அதிர்ச்சி அளித்து வருகின்றன.
இந்த இரு சம்பவமும் இதயத்தை நொறுங்க செய்வதாக உணர்கிறேன் என்றார்.
“பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான கொடூரமான வன்முறையானது இல்லையென பூமியில் எந்தஒரு தேசமும் இல்லை என்பதை இது தெளிவுபடுத்துகிறது என்ற அவர், இதை கட்டுப்படுத்த, ஐ.நா. யுஎன்எப்பிஏ ([ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம்), யுஎன்ஐசிஇஎப் (ஐக்கிய நாடு களின் குழந்தைகள் நிதியம்) மற்றும் பிற திட்டங்கள் மூலம் உலகில் அனைத்து நாடுகளுடன் இணைந்து பணியாற்றி பெண்கள் மற்றும் சிறார்களுக்கு மதிப்பளியுங்கள் என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.