சீனாவில் முன்னாள் துணை அதிபர் மீது பாலியல் புகார் கூறிய டென்னிஸ் வீராங்கனை மாயம்… சீனாவில் போட்டிகள் நடத்த சர்வதேச டென்னிஸ் சங்கம் தடை

Must read

சீனாவைச் சேர்ந்த உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுய் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் துணை அதிபருமான ஜங் ஜெய்லி மீது சமூக வலைத்தளம் மூலம் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார்.

2010 ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற பெங் ஷுய் சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்க தரவரிசைப் பட்டியலில் இரட்டையர் பிரிவில் 2014 ம் ஆண்டு நெ. 1 இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜங் ஜெய்லி மீதான பாலியல் புகார் அடங்கிய வீபோ (weibo) சமூக வலைப்பதிவை சீன அரசு நீக்கியுள்ளது.

இதுகுறித்து பேசிய சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கத்தின் (டபுள்யூ.டி.ஏ.  – WTA) தலைவர் சைமன், பாலியல் குற்றச்சாட்டு கூறிய பிறகு பெங் ஷுயை தங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர் எங்கிருக்கிறார் எப்படி இருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்று கவலை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தான் நலமுடன் இருப்பதாக டபுள்யூ.டி.ஏ. வுக்கு பெங் ஷுய் எழுதியதாகக் கூறப்படும் ஈமெயில் ஒன்றை சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்த ஈமெயில் குறித்து சந்தேகம் எழுப்பிய டபுள்யூ.டி.ஏ. தங்களது கேள்விகளுக்கு சீன அரசு இதுவரையில் முறையான விசாரணை நடத்தி நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய பதிலை அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியது.

மேலும், இந்த விவகாரத்தால் ஹாங்காங் உள்ளிட்ட சீன பிராந்தியத்தில் உடனடியாக அனைத்து விதமான சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடத்த தடை விதிப்பதாக சைமன் கூறியுள்ளார்.

சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கத்தைத் தொடர்ந்து ஒலிம்பிக் சங்கத்தையும் சீனாவில் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடத்த தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீனாவில் நடைபெற உள்ள நிலையில் டென்னிஸ் சங்கத்தின் இந்த தடை உலகளவில் டென்னிஸ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article