கோவை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் தேடப்பட்டு வந்த பாலியல் குற்றவாளியான கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் போக்சோ வழக்குபதிவு செய்த கோவை காவல்துறையினர், ஜான் ஜெபராஜை விசாரணைக்கு அழைக்க சென்ற நிலையில், அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து, கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கேரளாவில் கைது செய்தனர். அவருக்கு ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தின் மதபோதகராக இருப்பவர் ஜான் ஜெபராஜ். இவர், கடந்த 2004-ம் ஆண்டு மே 21-ந் தேதி கோவை, ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தன் வீட்டில் விருந்து வைத்துள்ளார். அதில் கலந்துகொண்ட 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில், மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து தனிப்படை அமைத்து ஜான் ஜெபராஜை போலீசார் தேடி வந்தனர். மேலும் அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக அவருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீசை போலீசார் பிறப்பித்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில், ஜான் ஜெபராஜ் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘நானும், என் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தூண்டுதலின் பேரில் சிறுமிகளை வைத்து எனக்கு எதிராக பொய் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளேன். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல மாட்டேன். எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த மனு வருகிற 15-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மதபோதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் கேரளா மாநிலம் மூணாறில் வைத்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜான் ஜெபராஜ் கேரளாவில் இருந்து கோவை காந்திநகர் மகளிர் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு, கைது செய்யப்பட்ட ஜான் ஜெபராஜை அழைத்து வந்தனர். ஆனால், முதன்மை நீதிமன்ற நீதிபதி குலசேகரன் விடுமுறையில் இருப்பதால், ஜான் ஜெபராஜை ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள பொறுப்பு நீதிபதி நந்தினி தேவி இல்லத்திற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். இதன் அடிப்படையில், ஜான் ஜெபராஜுக்கு ஏப்ரல் 25-ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார்.