விழுப்புரம்: பாலியல் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத,  சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ்-க்கு விழுப்புரம் மாவட்ட நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாகப் பணியாற்றி வந்த ராஜேஸ்தாஸ், பணியின்போது, பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் கூறப் பட்டது.  இந்த விவகாரம் குறித்துவிசாரணை நடத்தி வரும் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தல்,  முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. ஆகியோர் மீது 400 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த  வழக்கு விசாரணை கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.  விசாரணையை 3 மாதங்களில் முடிக்கவும் விழுப்புரம் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் இன்றைய விசாரணைக்கு, முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. மட்டுமே நேரில் ஆஜரானார். இதனால், நீதி மன்றத்தில் ஆஜராகாத  சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ்-க்கு நீதிபதி கோபிநாதன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அப்போது, அப்போது, சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் தரப்பில்  தங்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி,  90 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபோது, உங்களுக்கு எப்படி 15 நாள் கால அவகாசம் வழங்க முடியும் என கேள்வி எழுப்பியதுடன் வழக்கு விசாரணையை வரும் நவ.1-ம் தேதிக்கு ஒத்தி வைத்ததோடு, அன்றைய தினம் முன்னாள் சிறப்பு டிஜிபி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும்,  தவறினால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.