கொல்கத்தா:
நாகரீகமான தொழில் செய்பவர்கள் கூட சமயங்களில் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றும் சம்பவங்கள் நம் நாட்டில் நடந்து வருகிறது. இதற்கு உதாரணமாக விஜய் மல்லையா போன்றவர்களை எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக வங்கிகள் கடன் கொடுக்கவே அச்சப்படும் ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு சமூகம் தற்போது வங்கியில் கடன் வாங்கி, அதை திரும்ப செலுத்தி மோசடி நபர்களை தலைகுணிய செய்துள்ள சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்து வருகிறது. அதன் விபரம்…
கொல்கத்தாவில் சோனாச்சி சிகப்பு விளக்குப் பகுதி இந்தியாவிலேயே மிகப்பெரியதாகும். இங்கு பாலியல் தொழிலில் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த ஒரு பெண்ணுக்கு தற்போது வயது 63. இவர் இங்கேயே தற்போதும் வசித்து வந்தாலும், கிழக்கு மெட்ரோபாலிட்டன் பைபாஸ் சாலையில் ரூபி ஜெனரல் மருத்துமவமனை அருகே ஒரு அபார்ட்மென்ட் சொந்தமாக வைத்துள்ளார்.
இவரது மகன் நொருக்கு தீனி கடையும், ஓலாவில் வாடகை காரையும் இயக்கி வருகிறார். இவரின் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த வளர்ச்சிக்கு காரணம் சிகப்பு விளக்குப் பகுதியில் செயல்பட்டு வரும் யூனிக் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தியதால் இவை அனைத்தும் சாத்தியமானது.
இதேபோல் மற்றொரு பெண்ணுக்கு தற்போது வயது 36. இவர் 15 வயது முதல் இங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது 3 சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார். இவரது வீட்டையும் புதுப்பித்துள்ளார். அதே வங்கியில் இவர் 5 முறை கடன் பெற்றுள்ளார். கடைசியாக ரூ. 70 ஆயிரம் பெற்று தவணை முறையில் திரும்ப செலுத்தி வருகிறார்.
சோனாச்சி நில்மோனி மித்ரா தெருவில் செயல்படும் இந்த வங்கி 1995ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி தொடங்கப்பட்டது. உஷா பல்நோக்கு கூட்டுறவு சொசைட்டி பாலியல் தொழிலாளர்களால் நடத்தப்பட்டு வருகிறது. ரூ. 30 ஆயிரம் முதலீடு, 13 பாலியல் தொழிலார்களை உறுப்பினர்களாக கொண்டு தொடங்கப்பட்டது.
இது தற்போது ரூ. 30 கோடியுடன், மாநிலம் முழுவதும் உள்ள 30 ஆயிரத்து 932 பாலியல் தொழிலாளர்களை உறுப்பினர்களாக செயல்பட்டு வருகிறது. பாலியல் தொழிலாளர்கள் நலனுக்காக செயல்படும் நாட்டின் பெரிய அமைப்பான தர்பார் மகிளா சமன்வாயாக கமிட்டியின் கீழ் இந்த வங்கி செயல்படுகிறது.
2016&17ம் ஆண்டில் ரூ.7.62 கோடியை கடனாக 7 ஆயிரத்து 231 பாலியல் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதில் பெரும்பாலும் குழந்தைகள் கல்வி, வீட்டு வசதிக்காக பெறப்பட்ட கடன்களாகும். தனியார், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளோடு போட்டிபோட்டுக் கொண்டும், பணமதிப்பிழப்பை சமாளித்து வெற்றிகரமாக இந்த வங்கி செயல்படுகிறது.
இந்த வங்கி தொடங்குவதற்கு முன்பு உள்ளூர் பைனான்சியர்களிடம் 200 முதல் 300 சதவீதம் வரை வட்டி க்கு பணம் பெற்று வந்தனர். அப்போது எங்களுக்கு பணம் வாங்க எவ்வித வழியும் கிடையாது என்று அந்த 63 வயது பெண் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘தற்போது எல்லாம் மாறிவிட்டது. நான் இங்கு 146வது உறுப்பினர். நாள் தோறும் ரூ. 5 சேமித்தேன். எப்படி சேமிப்பது என்பதை கற்றுக் கொண்டேன். எனது மகள் திருமணம், எனது அபார்ட்மென்ட், மகன் கடை மற்றும் வாங்க கடன் பெற்றேன். அனைத்தையும் திரும்ப செலுத்திவிட்டேன்’’ என்றார்.
38 பேர் கொண்ட குழு வங்கி சார்பில் தினசரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள். இவர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 36 சிகப்பு விளக்கு பகுதிகளில் வீடுவீடாக சென்று டெபாசிட் வசூல் செய்வது இவர்களது பணி. இரு கணினி மயமாக்கட்ட வங்கி அலுவலகங்கள் சோனாச்சி மற்றும் கலிகத் பகுதியில் உள்ளது.
பணமதிப்பிழப்பின் போது இங்கு ரூ.2.63 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் ஆனது. இதையும் தொழிலாளர்கள் வரிசையில் நிற்கவிடாமல் வீடுவீடாக சென்று வங்கி ஊழியர்கள் வசூல் செய்துள்ளனர். வங்கியில் சேமிப்பு கணக்குக்கு 5 சதவீத வட்டியை வங்கி வழங்குகிறது. மாதாந்திர டெபாசிட்களுக்கு 10 சதவீத வட்டியை வழங்குகிறது. தினமும் ரூ.5 முதல் ரூ. 10 வரை சேமிக்கும் திட்டம் உள்ளது.
மேலும், காண்டம், சானிட்டரி நாப்கின்ஸ் ஆகியற்றை பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் விற்பனை செய்யும் பணியையும் வங்கி மேற்கொள்கிறது. பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவாய் ஈட்டினாலும் இவர்களது நாணயத்தையும், நேர்மையையும், கன்னியத்தையும் இந்த உலகுக்கு எடுத்துரைப்பதற்கு இந்த வங்கியின் வெற்றி கரமான செயல்பாடே எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.