பங்களாதேஷில் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பணி புரிந்துவந்தார் பர்வின். (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) மாதம் 9 ஆயிரம் ரூபாய் சம்பளம். அவரது வறுமையான குடும்ப சூழலுக்கு இந்த் தொகை போதவில்லை. குழந்தை, பெற்றோர் ஆகியோரை காப்பாற்ற வேண்டிய நிலை, பர்வினுக்கு. (விவாகரத்து பெற்றவர் பர்வீன்.)
இந்த நிலையில், அவருடன் பணியாற்றிய சக தொழிலாளி இந்தியாவில் நல்ல வேலை வாங்கிக் கொடுப்பதாக கூறவே, பர்வினும் ஒப்புக்கொண்டார்.
ஆனால் இதற்கு பர்வினின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. ஆனாலும், பணத்தேவையை ஈடுகட்ட, பெற்றோருக்குத் தெரியாமல் இந்தியாவுக்கு வந்தார்.
ஆனால் அவரை ஆசை காட்டி அழைத்துவந்த அந்த நபர், பர்வினை பாலியல் தொழிலி்ல் ஈடுபட்டிருக்கும் நேபாள பெண் ஒருவரிடம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டார்.
பாலியல் தொழிலில் ஆயிஷா வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டார்.
அதுமட்டுமல்ல.. மும்பையிலிருந்து பெங்களூரு உட்பட பல நகரங்களுக்கு பாலியல் தொழிலுக்காக கொண்டு செல்லப்பட்டார் பர்வீன். இறுதியில் புனே சிவப்பு விளக்குப் பகுதிக்கு அழைத்துவரப்பட்டார்.
இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு காவல்துறையினரின் அதிரடிச் சோதனைக்கு வர… பர்வீன் மீட்கப்பட்டு, தொண்டு நிறுவனம் ஒன்றில் சேர்க்கப்பட்டார்.
மும்பையில் உள்ள பங்களாதேஷ் தூதரகம் மூல், பர்வீனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வரும் 15ம் தேதிக்குள் அவர் தனது நாட்டுக்குச் சென்றுவிடுவார்.
இந்த நிலையில் பர்வீன், இந்திய பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
வாடிக்கையாளர்களிடம் டிப்ஸ் ஆக பெற்ற பணத்தை இந்திய அரசு செல்லாது என்று அறிவித்துவிட்டது. அவற்றை மாற்றிக்கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று மோடிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் பர்வின்.
நெஞ்சைத்தாடும் இந்த கடிதத்தை, “ரெஸ்க்யூ ஃபவுண்டேஷன்” என்ற சேவை அமைப்பின் தலைவர் ரூபாலி ஷிபார்கர் ஹிந்தியில் மொழிபெயர்த்து, ஆயிஷாவின் சார்பில் பிரதமமந்திரி நரேந்திரமோடிக்கும், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் டிவிட்டர் செய்தியாக அனுப்பியிருக்கிறார்.
பர்வின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு பகுதி:
“பெங்களூரு சிவப்பு விளக்குப் பகுதியில் நான் அடைக்கப்பட்டிருந்தபோது அந்த விடுதியின் உரிமையாளர் எங்கள் கையில் பணமே தரமாட்டார். வாடிக்கையாளர்கள் கொடுத்துச் செல்லும் தொகையை பயந்து பயந்து உள்ளாடைகளில் மறைத்து வைத்து பாதுகாத்தேன். அதில் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களே அதிகம்.
இதற்கிடையே அந்த ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று இந்திய அரசு அறிவித்துவிட்டது. என்னால் அவற்றை மாற்ற முடியாத சூழல். இப்போதுதான் மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது என்கிறீர்கள்.
தயவு செய்து அந்த நோட்டுக்களை மாற்ற உதவி செய்ய வேண்டும்” என்று மோடிக்கு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் பர்வின் தெரிவித்திருக்கிறார்.
அந்த அப்பாவிப் பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா பிரதமர்?