சென்னை: தாம்பரம் அருகே பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இந்த சாவுக்கு காரணமாக கழிவுநீர் கலந்த குடிநீர்தான் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அதை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மறுத்துள்ளார்.
தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டுக்குட்பட்ட காமராஜ் நகர் கன்டோன்மென்ட் பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது. தொடர் மழை காரணமாக, இதை அறியாமல் குடித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இவர்களில், முதல்கட்டமாக திரிவேதி என்பவர் உயிரிழந்தார். மேலும் சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த தகவல் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடத்துக்கு வருகை தந்து ஆய்வு செய்தனர். மேலும் காவல்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், அமைச்சர் த.மோ. அன்பரசன் அங்கு பல்லாவரம் மலைமேடு பகுதியில்ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்த அவர், உடனடியாக அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்த பகுதியைச் சேர்ந்த , ’23 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. அவர்கள் சாப்பிட்ட உணவுகளில் ஏதேனும் பிரச்னையா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குடிநீர் மூலம் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்தப் பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டிருக்கும். இன்னும் ஒரு மணி நேரத்தில் காரணம் தெரிய வந்துவிடும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களது பெயர் மோகனரங்கன், வரலட்சுமி என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் பாதுகாப்புக்குபோலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.