டில்லி:
பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்கும் வகையில், மியான்மர் எல்லை தாண்டி இந்திய ராணுவம் மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மியான்மரில் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் ரோஹிங்கியா மக்களை அங்கிருந்து விரட்டி வரும் நிலையில், நாகலாந்து தனிநாடு கோரி மியான்மர் நாட்டின் எல்லைப்பகுதியில் மறைந்த கொண்டு இந்தியாவில் பல்வேறு நாசவேலைகளில் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த 6ந்தேதி அரசு முறை சுற்றுப்பயணமாக மியான்மர் சென்றுள்ள மோடி அங்கு இரண்டு நாட்கள் தங்கி இருந்து பேச்சு நடத்தினார். அதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
இன்று ( செப். 27) அதிகாலை நேரத்தில், இந்திய மியான்மர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் மீது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, மியான்மர் எல்லை பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது.
சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும் இந்த துல்லிய தாக்குதலில் 70 கமாண்டோ வீரர்கள் பங்கு பெற்றதாகவும், நமது ராணுவத்தினரின் அதிரடி தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே கடந்த ஆண்டு காஷ்மீர் மாநிலத்தையொட்டி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த இந்திய ராணுவம், பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது அதிரடியாக துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.