ஈரோடு: தமிழகத்தில் 7200 பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த குள்ளம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் இன்று, ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பல்வேறு பகுதிகளை சேர்ந்த 36,105 குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 2500 ரூபாய் ரொக்கத்தினை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 10 ஆயிரத்து 966 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் 742 நுண் அறிவியல் ஆய்வகம் மற்றும் 7 ஆயிரத்து 200 மெய்நிகர் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை மற்றும் ஸ்மார்ர்ட் போர்டில் எழுதும் முறை, மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, பள்ளிக் கல்வித்துறையில் மாணவ, மாணவியர்களுக்கு 14 வகையான கல்வி உபகரணங்கள், மாணவ, மாணவியர்களுக்கு 52 லட்சத்து 47 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளியில் பயின்று 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 405 மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர் என்றும், மருத்துவ ல்லூரி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தையும் அரசே ஏற்று, அதற்காக ரூ.16 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.