சென்னை: சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுகவை கைப்பற்றி விடலாம் என்ற கனவுடன் களத்தில் இறங்கிய சசிகலாவுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் ஆக பதவி ஏற்றுக் கொண்ட சசிகலாவை, எடப்பாடி, ஒபிஎஸ் தலைமையிலான அதிமுக நீக்கி நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து சசிகலா தரப்பில் தொடரப்பட்ட வழக்கும், அதை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும்,  அதிமுக பொது செயலாளர் என சசிகலா கூறுவது செல்லாது என அறிவிக்க கோரி அதிமுக தரப்பில் ஓபிஎஸ் இபிஎஸ் மனு அளித்திருந்தனர். இந்த வழக்க  கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.  இன்று வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பை  சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார். அப்போது, சசிகலாவை அதிமுக நீக்கியது செல்லும் என உத்தரவிட்டதுடன் சசிகலா மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். ஏற்கனவே கடந்த வாரம் தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஏற்கனவே இரட்டை இலை வழக்கில் சசிகலா மற்றும் டிடிவியின் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் உள்பட நீதிமன்றங்கள் ற்காத நிலையில், தற்போது அவரது பொதுச்செயலாளர் என்ற பதவியும் பறிக்கப்பட்டு உள்ளது. இது அதிமுகவை கைப்பற்ற எண்ணிய சசிகலாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதுடன், அவரது அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்ய முடிவு செய்து அதற்கான கோப்புகளை சசிகலாவிடம் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஒப்படைத்தனர். இதையடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றார். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலாவின் அண்ணன் மகன் டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமித்தார். 2017 செப்டம்பரில் கூடிய அதிமுக பொதுக்குழு பொதுச்செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளர் பதவிகளில் இருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கி தீர்மானம் நிறைவேற்றியது. அப்போது பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். சசிகலா மீதான வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடைக்கால மனு தாக்கல் செய்தனர்.