செப்டம்பர் மாதத்திற்குள் 75% ஏடிஎம்கள் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை விநியோகிப்பதையும், மார்ச் 2026க்குள் 90% ஏடிஎம்களில் இந்த நோட்டுகள் விநியோகிப்பதையும் உறுதி செய்யுமாறு வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கேட்டுக் கொண்டுள்ளது.

ஒரு சில வங்கி ஏடிஎம்களில் மட்டுமே தங்களுக்குத் தேவையான மதிப்பில் ரூபாய் நோட்டுகளை பெறமுடியும் என்ற நிலை உள்ளதால் சிலர் அதற்காக ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

பெரும்பாலான, ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும்போது, ​​பயனர்கள் ரூ.500 மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை மட்டுமே பெறுகிறார்கள், இது சிறிய பரிவர்த்தனைகளுக்கு சிரமமாவதுடன் சில்லறை தட்டுப்பாடு நிலவுகிறது.

இதையடுத்து சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அந்தந்த வங்கி ஏடிஎம்களிலேயே பெற தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது.

திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கையில், “அடிக்கடி பயன்படுத்தப்படும் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அணுகுவதை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து வங்கிகளும் வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் (WLAOs) தங்கள் ஏடிஎம்கள் ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது….” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகள் மற்றும் வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் (WLAOs) இந்த உத்தரவை படிப்படியாக செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த மாதம், ரிசர்வ் வங்கி ஏடிஎம் கட்டணத்தை மே 1 முதல் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2 முதல் ரூ.23 வரை உயர்த்தியது, மேலும் இந்தக் கட்டணம் ஏடிஎம் நெட்வொர்க்கால் தீர்மானிக்கப்படும். நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.17 இல் இருந்து ரூ.19 ஆகவும், நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.7 ஆகவும் பரிமாற்றக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிவர்த்தனைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி கூடுதலாக விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் 75 சதவீத ஏடிஎம்களில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை விநியோகிக்க வங்கிகளுக்கு செப்டம்பர் 30, 2025 வரை காலக்கெடு வழங்கியுள்ளது.

மேலும், மார்ச் 31, 2026க்குள், 90 சதவீத ஏடிஎம்களில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை விநியோகிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.