ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் பெருமக்களுக்கு பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளமும் வாழ்த்துக்களை, வணங்கித் தெரிவித்துக்கொள்கிறது.
ஆசிரியர் தினத்தையொட்டி, பிரதர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், கனிமொழி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மாணவனை வடிவமைப்பதற்கும் நமது தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பறியது. கடின உழைப்பாளி களான ஆசிரியர்களுக்கு நாம் என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர் தினத்தன்று, நம் ஆசிரியர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள்க்கு அஞ்சலி செலுத்துவோம் #OurTeachersOurHeroes” என பதிவிட்டுள்ளார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற தத்துவஞானியும், அறிஞரும், கல்வியாளரும், முன்னாள் குடியரசு தலைவருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நல்ல ஆசிரியர்களால் சிறந்த ஒழுக்கம் கொண்ட, கைதேர்ந்த திறமையுடைய, அறிவாற்றல் பெற்ற மனிதர்களை உருவாக்கித் தர முடியும்.
ஆசிரியர்களின் விழுமிய அனுபவங்களே மனித வரலாற்றில் வாழ்வையும், ஒளியையும் இணைக்கும் புள்ளிகள் ஆகும். இத்தகைய ஒளி அநேக விளக்குகளை ஒளிரச் செய்திடும் கருவியாக உள்ளது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களின் உன்னத முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு, தமிழ்நாட்டில் உள்ள நம் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, அறப்பணியான ஆசிரியப் பணியினை அர்ப்பணிப்பு உணர்வோடு ஆற்றி வரும் நல்லாசிரியர்களுக்கு ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’, சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்குதல், குழந்தைகள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ போன்ற சிறப்புமிக்க விருதுகளை வழங்கி ஆசிரியப் பெருமக்களை கவுரவித்து வருகிறது.
நாட்டின் வருங்கால தூண்களான மாணவச் செல்வங்களுக்கு அழிவில்லா கல்விச் செல்வத்தை அளிப்பதோடு, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் போதித்து, வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரிய பெருமக்களுக்கு இந்நன்னாளில் எனது உளம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் , “கல்வி சிறந்த தமிழ்நாடு என்னும் மகாகவி பாரதியின் சொல்லை மெய்யாக்கி, தமிழகத்தை தலைநிமிர்ந்து நடைபோடச் செய்தவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள். உயர்கல்வியில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணியில் திகழக் காரணம் தன்னலமற்ற ஆசிரியர்களின் கடின உழைப்பே! #ஆசிரியர்தினம்” என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வாழ்நாளை வகுப்பறைகளில் அர்ப்பணிக்கும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் ‘ஆசிரியர் தின’ நல்வாழ்த்துகள்! ஆசிரியர் சமுதாயத்திற்காகவும், அவர்களது நலத்திட்டங்கள்- உரிமைகளுக்காகவும் என்றைக்குமே தி.மு. க பாதுகாப்பு அரணாகத் திகழும்!
திமுக எம்.பி. கனிமொழி, “கல்வியில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்கியதில், ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மென்மேலும் தமிழகத்தை அறிவுசார் சமூகமாக மாற்றி வரும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துகள்.” என தெரிவித்துள்ளார்.