சென்னை: பெரியார் பிறந்த செப்டமம்பர் 17ம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர்கள் சாமிநாதன், காந்தி, மூர்த்தி ஆகியோர் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர். அப்போது, உறுப்பினர்கள் எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலுரை அளிக்க உள்ளனர்.
அதுபோல இன்று தொழிலாளர் நலநிதிய திருத்த சட்டமுன்வடிவு, கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளன.
இந்த நிலையில், இன்றைய அவைக்கூட்டத்தொடரில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி 110-ன்கீழ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்’ ஆகக் கொண்டாடுவோம் என அறிவித்துள்ளதுடன், அன்றைய தினம், தலைமைச்செயலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பெரியாருக்கு புகழாரம் சூட்டியதுடன், பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது என்றும், இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ அடித்தளம் அமைத்தவர் பெரியார். பெரியார் எழுதிய எழுத்துகள், பேசிய பேச்சுகள் யாரும் எழுத, பேச தயங்கியவை ஆகும்.
பெரியாரின் போராட்டம் குறித்து பேசுவது என்றால் அவையை 10 நாட்கள் ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும் என்றார்.