சென்னை:
பொது இடங்களில் திருநங்கைகளுக்கு கழிப்பறை அமைக்கக்கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செம்பியம் பகுதியைச் சேரந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்:
மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு பல துறைகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 10 லட்சம் 3ம் பாலினத்தவர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு பொது இடங்களில் தனி கழிப்பிட வசதிகள் கிடையாது. எனவே 3ம் பாலினத்தவர்களுக்கு தனியாக பொது கழிப்பறை ஏற்படுத்தித் தருமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தேன்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.