மாமல்லபுரம்: பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்ட மேடையில், பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு ஒரு இருக்கை போடப்பட்டு, அதை வெற்றிடமாக வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை திட்டமிட்டபடி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாமக தலைவர் அன்புமணி தலைமையில், நடைபெற்று வரும் பொதுக்குழுவில் 2000-க்கும் மேற்பட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பொதுக்குழுவில் பா.ம.க. கட்சி விதிகள் திருத்தப்பட்டு, பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. பாட்டாளி மக்களின் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இல்லாமலும், அன்புமணி தலைமையிலும் நடைபெறும் முதல் பொதுக்குழு இதுவாகும்.

முன்னதாக, பாமக நிறுவனர் ராமதாசுக்கும், பாமக தலைவர் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலின் தொடர்ச்சியாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு போட்டியிக அன்புமணி ராமதாஸ், நாளை (ஆகஸ்டு 9ந்தேதி) சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டி இருந்தார். . இதையடுத்து, அன்புமணி தலைமையிலான பாமகவின் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி, இருவரையும் நேரில் ஆஜராக அறிவுறுத்தி இருந்தார். அதன்படி அன்புமணி ஆஜரான நிலையில், ராமதாஸ் காணொளி காட்சி மூலம் ஆஜரானார். விசாரணையை அடுத்து, அன்புமணி பொதுக்குழு கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்று அறிவித்தபடி, அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்ட பேனரில் ராமதாஸ் புகைப்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.