சென்னை:
தமிழக பள்ளிக் கல்வித்துறைக்குக்கு என தனி டிவி சேனல், தேர்தலுக்கு பிறகு தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
இன்று பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளில் உள்ள 7 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்தவர், வரும் கல்வியாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும் கூறினார்.
ஏற்கனவே அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி, புத்தக பை என 14 வகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவிற்கே தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருப்பதாக கூறியவர், இந்த ஆண்டு 28 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே 37 லட்சம் மாணவர்கள் லேப்டாப் பெற்றுள்ள நிலையில் 6 ஆண்டுகளில் 65 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிமுக அரசின் சாதனை என்று தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு புதிய திட்டமாக 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும், 6, 7, 8 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்காக 7,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்தவர், தேர்தல் முடிவுக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறைக்கு தனிச் சேனல் தொடங்கப்படும். இதன் மூலம் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் போன்ற நவீனக்கல்வி முறை பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே அமைச்சர் செங்கோட்டையன் கடந்த ஆண்டு அக்டோபர் 30ந்தேதி செய்தியளார்களிடம் பேசும்போது, தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு என தனி டிவி சேனல் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு, அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுடலைகண்ணன் மற்றும் இணை இயக்குனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், தொலைக்காட்சிக்கான முன்தயாரிப்பு காட்சிகளை பதிவு செய்யவும், தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
கேமரா, தொழில்நுட்பகருவிகள் வாங்கும் பணிகளும் தொடங்கி இருப்பதாகவும், காட்சி பதிவுக்காக, ‘ட்ரோன்’ என்ற ஆளில்லா விமானம் வாங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதுபோல படப்படிப்பு நடைபெறும் வகையில் சென்னை, அண்ணா நுாலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் (தை 1ந்தேதி) பொங்கல் தினத்தன்று பள்ளிக்கல்வித்துறை சேனல் தனது ஒளிபரப்பை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.