ஐதராபாத்
தெலுங்கானா அரசு வரும் நிதி ஆண்டில் இருந்து விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) அளிக்கும் என அம்மாநில ஆளுனர் அறிவித்துள்ளார்.
நேற்று தெலுங்கானா மாநிலத்தில் குடியரசு தினம் விமரிசையாக கொண்டாடப் பட்டது. இந்த விழாவில் ஆளும்கட்சியின் தலைவர்களும் எதிர்க்கட்சியின் தலைவர்களும் கலந்துக் கொண்டனர். அணிவகுப்பு மரியாதையை ஆளுனர் நரசிம்மன் ஏற்றுக் கொண்டு விழாவில் உரையாற்றினார்.
நரசிம்மன் தனது உரையில், “வரப்போகும் நிதியாண்டான 2018-19 முதல் அரசு விவசாயத்துக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. விவசாயிகளுக்கு வருடத்துக்கு ஏக்கருக்கு ரூ.8000 விவசாய முதலீட்டு உதவி அளிக்கப்படும். மேலும் விவசாயத் திட்டத்துக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் கடன் வலையில் சிக்காமல் காக்கப்படும்.
விவசாயத்துக்கு போதுமான அளவு நீர் கிடைக்க அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் மூலம் மாநிலத்திலுள்ள ஒரு கோடி ஏக்கர் நிலம் பயனடையும். அத்துடன் வரப்போகும் வருடங்களில் தேவதூலா, பீமா. கல்வாகுர்தி ஆகிய நீர்த்திட்டங்களுக்கு வருடத்துக்கு ரூ.25000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.
அவர் மேலும், ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடுகள், மற்றும் பல நலத்திட்டங்கள், தொழில்துறையினர் முன்னேற்ற திட்டங்கள் போன்றவைகள் பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.