புதுடெல்லி:
யுத தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், மணீஷ் திவாரி, சசிதரூர் மற்றும் விவேக் தங்கா உள்ளிட்டோர் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இவர்களில் பலர், காங்கிரசில் மாற்றத்தை வலியுறுத்தி கடிதம் எழுதிய 23 பேரில் அடங்குவர். கூட்டு அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் பாதுகாப்பு துறை தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. 41 ஆயுத தொழிற்சாலைகளை தனியார் மயமாக்குதல், அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில் மாற்றங்கள், பாதுகாப்பு கொள்கையை நீர்த்துப் போகும்படியான செயல்பாடுகள் ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன.

இந்த முடிவுகள், தேச நலன் களுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியவை. மேலும், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கும், ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்துக்கும் முரணானவை.

நாட்டின் பாதுகாப்பு தயார்நிலையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, தேசநலன் கருதி, இந்த முடிவுகளை மத்திய அரசு கைவிட வேண்டும்.

41 ஆயுத தொழிற்சாலைகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து, அவற்றில் பணியாற்றும் 70 ஆயிரம் தொழிலாளர்கள் ஒரு மாத வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபோல், கடந்த 1984-ம் ஆண்டு இங்கிலாந்தில் ராயல் ஆயுத தொழிற்சாலைகள் தனியார்மயமாக்கப்பட்டபோது, பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆயுத தொழிற்சாலைகள் மலிவு விலைக்கு விற்கப்படும். அதனால், வேலை இழப்பு ஏற்படும். ஏகபோக தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் என்று கவலைப்படுகிறோம்.

ஆயுத தொழிற்சாலை வாரியம், நாடாளுமன்றம் மூலமாக மக்களுக்கு பொறுப்புடையது. தணிக்கை விதிகளுக்கு உட்பட்டது. இதில் எந்த கடமையில் ஆயுத தொழிற்சாலை வாரியம் தவறியது என்பதை தெரிவிக்க வேண்டும். ஆயுத தொழிற்சாலைகளுக்கு நாடு முழுவதும் ஏராளமான சொத்துகள் உள்ளன. அவை மோசடி செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது. ஆயுதங்களுக்கு இறக்குமதியை சாராமல் இருப்பதுதான் இப்போதைய தேவை.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.