டில்லி:

17வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மூத்த உறுப்பினர் சந்தோஷ் கங்வார் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் கூடியதும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களை நடைபெற்று முடிந்து புதிய மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்றுள்ளது. இந்த நிலையில்  ஜூன் 6ந்தேதி நாடாளுமன்ற முதல் கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் வகையில் தற்காலிக சபாநாயகராக  மக்களவையின் மூத்த உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சந்தோஷ் கங்வார் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரான சந்தோஷ் கங்வார்1989-ம் ஆண்டு முதல் பரேய்லி தொகுதியில் இருந்து, மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். இடையில் 2009ம் ஆண்டு மக்களவையில் தோல்வியை சந்தித்தார்.  14-வது மக்களவையில் பாஜகவின் கொறடா வாக செயல்பட்டார். 16-வது மக்களவையில் மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சராக பணியாற்றினார். தற்போது 17-வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக  சந்தோஷ் கங்வார் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து  ஜூன் 19ம் தேதி மக்களவைக்கான புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.