டில்லி:

எம்.சி.ஐ. என்ற இந்திய மருத்துவ கவுன்சிலில் பெரிய அளவில் ஊழல் நடந்தது அம்பலமானது. இதில் ஒடிசா மருத்துவக்கல்லூரி மீதான வழக்கில் நீதிபதிகள் பெயரில் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதனை சி.பி.ஐ. விசாரிக்கிறது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

தொடர்ந்து இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, வழக்கு தொடர்ந்துள்ள அரசு சாரா அமைப்பு சார்பில் மூத்த வக்கீல் பிரஷாந்த் பூஷன் ஆஜரானார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து அவர் சில கருத்துக்களை தெரிவித்தார். இதனால் கோபமடைந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கண்டனம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இவருக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. அப்போது திடீரென ஆவேசமடைந்த பூஷன், ‘‘எனக்கு பேச அனுமதிக்கவில்லை என்றால் இந்த உச்சநீதிமன்றம் எதற்கு இழுத்து மூடுங்கள்’’ என்று கூறிவிட்டு நீதிமன்ற அறையில் இருந்து வேகமாக வெளியேறினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.