சென்னை; சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடத்தப்பட மாட்டாது  உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறினார்.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மே மாதங்களில்  சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பள்ளி கல்லூரி தேர்தல்கள் முன்கூட்டியே நடத்தப்படுமா அல்லது தேர்தல் முடிந்த பிறகு நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்பதால், பள்ளிகளில் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படும் என்பது உறுதியாகி உள்ள நிலையில், கல்லூரிகளில்  செமஸ்டர் நடத்தப்படுவது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்,   சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வு நடத்தப்படமாட்டாது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அமைச்சர் கோவி.செழியன்  இன்று  தஞ்சையில்,  5 புதிய சொகுசு தாழ்தளப் பஸ்கள் சேவையை  தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியால் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பஸ்களில் ஏறி, இறங்க சிரமப்படுவதை உணர்ந்து தாழ்தள பஸ்கள் சேவையை அதிகப்படுத்தி உள்ளார். இந்த தாழ்தள பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக, ஏறவும் இறங்கவும் முடியும்.  மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி முதியவர்கள், பெண்களுக்கும் இந்த பஸ்கள் எளிய முறையில் இருக்கும். அனைத்து விதமான சிறப்பு அம்சங்களும் இந்த பஸ்கள் கொண்டது என்றார்.