பெங்களூரு:
கர்நாடகாவில் சிகரெட், பீடியை மொத்தமாக பாக்கெட் அளவில் தான் விற்பனை செய்ய வேண்டும். தனித்தனியாக உதிரியில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘சிகரெட், புகையிலை பொருட்கள் சட்டத்தின் 7 மற்றும் 8 வது பிரிவுகளின் படி புகையிலையை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்த எச்சரிக்கை படம், ஒரு பாக்கெட்டில் 80 சதவீதம் அளவு இருக்க வேண்டும்.
ஆனால், நுகர்வோர் முழு பாக்கெட்டை வாங்காமல் சிகரெட், பீடியை தனித்தனியாக உதிரியில் வாங்குகின்றனர். இதனால் பாக்கெட்டில் உள்ள எச்சரிக்கை படத்தை அவர்கள் பார்க்க வாய்ப்பு ஏற்படாமல் போய்விடுகிறது. அதனால் இனி சிகரெட், பீடியை முழு பாக்கெட்டாக தான் விற்பனை செய்ய வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த உத்தரவில், ‘‘புகையிலை பொருட்களை இளைய தலைமுறையினர் அதிகம் பயன்படுத்துகின்றனர். முழு பாக்கெட்டாக தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கும் போது, அதை விலை கொடுத்து வாங்கும் வகையில் இளைய தலைமுறையினரிடம் போதிய அளவு பணம் இருக்காது. அதனால் இந்த பழக்கத்தை படிப்படியாக அவர்கள் விட்டுவிட வாய்ப்புள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.