சென்னை:  அமைச்சர் சேகர்பாபு தான்  என்னை ஒருமையில் பேசினார் என்றும், முதல்வர் என் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ததில் எனக்கு வருத்தம் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

“நாளைக்கே ‘இந்தக் கூட்டணி சரிவராது; நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்’ என முதல்வர் என்னிடம் சொன்னால், மகிழ்ச்சியாக ஏற்பேன்; எந்தக் கவலையும் இல்லை எனக்கு”  என தவாக தலைவர் வேல்முருகன்  குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் நேற்று (மார்ச் 20ந்தேதி)  அன்று   நடைபெற்ற விவாதத்தின்போது,   அரசு தேர்வுகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று  திமுக கூட்டணி கட்சியான தவாக எம்எல்ஏ,  வேல்முருகன் பேசினார்.  மேலும், தமிழ்நாட்டில்,  சாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று வேல்முருகன் கோரிக்கை விடுத்ததோடு,  தெலுங்கான பீகார் மாநிலங்களில் ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி பேசினார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக  சில கருத்துகளையும் தெரிவித்தார்.

வேல்முருகனின் பேச்சு சர்ச்சைக்குரியதாக இருப்பதாக கருதப்பட்டதால், அவை குறிப்பிலிருந்து அவரது கருத்துக்கள் நீக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார்.

இதனால் கோபமடைந்த வேல்முருகன்,   “எனக்கு பேசுவதற்கு அனுமதி தாருங்கள்” எனக் கூறியபடி,  நேரடியாக சபாநாயகர் அருகே சென்றார். மேலும், அமைச்சர்களை நோக்கியும்  கையை நீட்டி பேசினார் .

இதனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவை மாண்பை மீறி நடந்து கொள்கிறார். அவர் மிகுந்த பிரசிங்கித்தனத்துடன் செயல்படுகிறார். எனவே, அவர்மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து, சபாநாயகர் அப்பாவு, வேல்முருகனுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து, இனிமேல் இவ்வாறு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இந்த சம்பவம் சட்டமன்றத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதையடுத்து சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்த வேல்முருகன்,  சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  “தமிழ் படிக்காதவர் களும் தமிழக அரசின் தேர்வுகளை எழுத அனுமதி அளிக்கப்பட்டது. ஓ.பி.எஸ். ஆட்சியில் திருத்தம் செய்யப்பட்ட அந்த விதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தேன். ஆனால்,  அதை அவை குறிப்பில் இருந்து அதை நீக்கிவிட்டார்கள்.

 என்னை பேச அனுமதி வேண்டும் என்று சபாநாயகரிடம் சென்றேன். அது தவறா?  நான் பேசியது தவறு என்கிறார்கள்,  அமைச்சர் சேகர்பாபு தான் என்னை ஒருமையில் பேசினார். ஆனால், அவர் என்னைப் பற்றிய தவறான தகவலை முதல்வரிடம் கூறி, அதை முதல்வரும் அப்படியே நம்பி கருத்து தெரிவித்தது எனக்கு வருத்தம் அளிக்கிறது,” என்று தெரிவித்தார்.

அவையில்,  “என் தாய்மொழி குறித்து பேச வாய்ப்பு தரவில்லை என்றால், பாயிண்ட் ஆப் ஆர்டர் எழுப்பி நேரம் கேட்க எனக்கு உரிமை உள்ளது. தமிழுக்கு எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும், என் உயிரையும் தியாகம் செய்யத் தயார்,”

இவ்வாறு கூறினார்.

வீடியோ உதவி: நன்றி சாணக்யா